இலங்கை ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பி.கே.ஜி.எம் லசந்தா ரோட்ரிகோ, இம்மாதம் 14-ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரது பயணத்தின் இரண்டாம் நாளான இன்று ஜெய்ப்பூரில் உள்ள தென்மேற்கு படைப்பிரிவுத் தலைமையகத்திற்கு சென்றார்.
அங்கு அவருக்கு தென்மேற்கு படைப்பிரிவு தளத்தின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஞ்சிந்தர் சிங் வரவேற்பு அளித்தார். பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது பிராந்திய பாதுகாப்பு, கூட்டுப் பயிற்சி, திறன் மேம்பாடு, சிறந்த நடைமுறைகளின் பரிமாற்றம் போன்ற அம்சங்களில் பரஸ்பர நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து தென்மேற்கு படைப்பிரிவு தலைமையகத்தில் உள்ள மூத்த அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது, படைகளின் செயல்பாட்டு அனுபவங்கள் குறித்து பரஸ்பரம் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மேலும் இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதித்தனர்.
திவாஹர்
