பிரேசிலியாவில் 11-வது பிரிக்ஸ் நாடாளுமன்ற அவைகளின் மன்றக் கூட்டம் நிறைவடைந்தது – மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவின் அறிக்கை.

வணக்கம்!

பிரிக்ஸ் நாடாளுமன்ற அவைத் தலைவர்கள் உச்சிமாநாட்டை நடத்தியதற்காக பிரேசிலுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மாநாட்டின் போது, ​​பல முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. அர்த்தமுள்ள உரையாடல், கருத்துப் பரிமாற்றம், பிரிக்ஸ் நாடுகளிடையே நாடாளுமன்ற ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாட்டை ஊக்குவித்தல், பொருளாதார விஷயங்களில் கூட்டாகப் பணியாற்றுதல் ஆகியவை தொடர்பாக பகிரப்பட்ட அர்ப்பணிப்பு இந்த மாநாட்டில் வெளிப்பட்டது. இறுதிப் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் உச்சிமாநாடு நிறைவடைந்துள்ளது.

இந்த இறுதிப் பிரகடனத்தில், பயங்கரவாதத்தை கூட்டாக எதிர்த்துப் போராட வேண்டும் என்று பிரிக்ஸ் நாடுகள் ஒப்புக்கொண்டன. ஏப்ரல் 22 அன்று இந்தியாவின் காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத சம்பவத்தை அவர்கள் கண்டித்தனர். மேலும் கூட்டு முயற்சிகள் மூலம் பயங்கரவாதத்திற்கு எதிராக சமரசமற்ற கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர். உலகின் அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிராக சமரசமற்ற கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் விவாதம் நடைபெற்றது. ஆனால் அதன் பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பேற்பும் இருக்க வேண்டும்.  பொருளாதார உள்ளடக்கம், பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்குள் வர்த்தகத்தை எவ்வாறு மேம்படுத்தலாம், பொருளாதார ஒத்துழைப்பை எவ்வாறு மேம்படுத்தலாம் போன்றவை குறித்தும் விவாதங்கள் நடந்தன. சட்டத்தின் ஆட்சி, உலகளாவிய ஒத்துழைப்பு, உலக அரங்கில் உரையாடலின் அவசியம் ஆகியவற்றை இந்தியா எப்போதும் ஆதரித்து வருகிறது.

அடுத்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டை இந்தியா நடத்தும். மற்ற பிரிக்ஸ் நாடுகளுடன் இணைந்து, பொருளாதாரம், சமூகம், வர்த்தகம், செயற்கை நுண்ணறிவு, பிற முக்கிய அம்சங்கள் குறித்த விவாதங்களில் ஈடுபடுவோம். இந்தியாவில் நடைபெறும் உச்சிமாநாட்டிற்கான நிகழ்ச்சி நிரல் உருவாக்கப்படும். மேலும் இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதை இந்தியா உறுதி செய்யும்.

அனைத்து பிரிக்ஸ் நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டு முயற்சிகள், நாடாளுமன்ற பரிமாற்றங்கள், கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது, சிறந்த நடைமுறைகள், அனுபவங்கள் ஆகியவற்றின் மூலம், நமது மக்களுடன் இணைந்து அவர்களின் வாழ்க்கையில் அர்த்தமுள்ள மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்று நம்பிக்கையை வெளிப்படுத்துகிறேன்.

அனைத்து பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்ற அவைத் தலைவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply