தமிழக அரசு அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக முழுமையாக நிரப்பி மக்கள் பணிகள் முறையாக காலத்தே நடைபெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

ஜி.கே.வாசன்.

தமிழக அரசு அரசுத்துறைகளின் மூலம் நடைபெறும் பணிகள் காலத்தே முறையாக சரியாக நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த மே மாதம் 31 ஆம் தேதி வரை பல்வேறு அரசுத்துறைகளில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெற்றனர். ஓய்வு பெற்றவர்களின் காலிப்பணியிடத்தை காலம் தாழ்த்தாமல் முழுமையாக நிரப்பி இருக்க தவறிவிட்டது தமிழக அரசு.

தமிழகம் வளர்ச்சி அடைந்த மாநிலம் என்று கூறிக்கொள்ளும் வேளையில் தமிழக அரசின் திட்டங்களும், மத்திய அரசின் திட்டங்களும் தொடர்ந்து தொய்வில்லாமல் நடைபெற அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் அவ்வப்போதே நிரப்பப்பட வேண்டும்.

தமிழக அரசின் 43 அரசுத்துறைகளில் அலுவலக உதவியாளர்கள், அதிகாரிகள், உயர் அதிகாரிகள், தலைமை அதிகாரி என பல்வேறு நிலைகளில் சுமார் 15 இலட்சம் வரை பணிபுரிவார்கள் எனத்தெரிகின்றது. இந்த 15 இலட்சம் பேரில் இப்போது சுமார் 9.50 இலட்சம் பேர் பணியில் இருப்பதாக கூறப்படுகின்றது. அப்படி என்றால் மீதமுள்ள சுமார் 5 இலட்சம் பேருக்கான பணிகள் நிரப்பப்படவில்லை என கணக்கிடப்படுகின்றது.

மேலும் இந்த நிதியாண்டில் சுமார் 20,000 பேர் வரை ஓய்வு பெற இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அரசின் பல்வேறு துறைகளில் உள்ள சுமார் 75,000 காலிப்பணியிடங்கள் 2026 ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் ஆசிரியர்கள், மருத்துவர்கள், சீருடைப்பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான காலிப்பணியிடங்கள் இன்னும் முழுமையாக நிரப்பப்படவில்லை.

கடந்த ஏப்ரல் மாதம் வரை தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு வேலைக்காக காத்திருப்போர் சுமார் 31.84 இலட்சம் பேர். படித்து பட்டம் பெற்று அரசுப்பணிக்காக தேர்வுகளை எழுதி பல ஆண்டுகளாக பணிக்கு காத்திருப்போரும் ஏராளம். இச்சூழலில் அரசுத்துறைகளில் பணியாற்றி ஆண்டுதோறும் ஓய்வு பெறும் பணியாளர்களின் காலிப்பணியிடங்கள் அதிகரித்துக்கொண்டே போகிற போது அரசுத்துறைகளின் பணிகள், மக்களுக்கான பணிகள் காலத்தே நடைபெறாமல் போகிற சூழலில் தமிழகம் வளர்ச்சி அடையாது.

எனவே தமிழக அரசு அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணிடங்களை காலம் தாழ்த்தாமல் முழுமையாக உடனடியாக நிரப்ப வேண்டும். மேலும் தேர்வாணையமும், தேர்வு வாரியங்களும் அவ்வப்போது நடத்தும் தேர்வுக்கான முடிவுகளை காலத்தே வெளியிட்டு அரசுப்பணிகளை அவ்வப்போதே வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் படித்துவிட்டு வேலைக்காக காத்திருப்போர், அரசுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று காத்திருப்போர், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு காத்திருப்போர் என அரசுப்பணிக்கு தகுதியுள்ள அனைவருக்கும் காலத்தே பணி கிடைக்க தமிழக அரசு தொடர் நடவடிக்கை மேற்கொண்டு தமிழக மக்கள் நலன் காக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுகொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply