உற்பத்தியில் புதுமையையும் உள்ளூர் விநியோகச் சங்கிலிகளையும் ஊக்குவிக்க டிபிஐஐடி- ஹாஃபில் இந்தியா நிறுவனம் இடையே ஒப்பந்தம்.

உற்பத்தித் துறை  புத்தொழில் நிறுவனங்கள், குறு சிறு நடுத்தர நிறுவனங்கள், தொழில்முனைவோர் ஆகியோரை மேம்படுத்துவதன் மூலம் இந்தியாவின் உற்பத்தி மற்றும் புதுமை சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்காக, தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி), ஹாஃபில் (Hafele) இந்தியா பிரைவேட் லிமிடெட்  நிறுவனம் ஆகியவை  நேற்று (மே 07, 2025) புதுதில்லியில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒத்துழைப்பு, உள்ளூர் விநியோகச் சங்கிலிகளை ஊக்குவிப்பதற்கும், உலகளாவிய உற்பத்தி மையமாக மாறுவதற்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை விரைவுபடுத்துவதற்குமான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

இந்த உத்திசார் ஒத்துழைப்பின் கீழ், இலக்கு சார்ந்த முதலீடுகள், வழிகாட்டுதல், உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் ஒருங்கிணைப்பின்  மூலம் புதுமையான உற்பத்தி முறைகள், தொழில்முனைவோரை ஆதரிக்கும் முயற்சிகள் ஆகியவற்றை ஹாஃபில்  நிறுவனம் மேற்கொள்ளும்.

டிபிஐஐடி-யின் இணைச் செயலாளர் திரு சஞ்சீவ் கூறுகையில், “ஹாஃபில் இந்தியா நிறுவனத்துடனான இந்த ஒத்துழைப்பு தொழில்துறை சூழல் அமைப்புகளை மேம்படுத்துவதற்கான அணுகுமுறை ஆகும் என்று கூறினார். இது மேக் இன் இந்தியா  திட்டத்தின் தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து உலகளாவிய சிறந்த நடைமுறைகளை ஒருங்கிணைக்கும் என்று அவர்  தெரிவித்தார்.”

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டிபிஐஐடி இயக்குநர் டாக்டர் சுமீத் ஜரங்கல், ஹாஃபில் இந்தியா நிறுவனத்தின் தெற்காசிய பிரிவின் நிர்வாக இயக்குநர் திரு பிராங்க் ஷ்லோடர் ஆகியோர் கையெழுத்திட்டனர். இது கையெழுத்திட்ட நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். பரஸ்பர ஒப்பந்தத்தின் அடிப்படையில் நீட்டிப்புக்கான வாய்ப்பும் அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply