சவுதி அரேபியாவுக்கான பிரதமரின் அரசுமுறைப் பயணம் நிறைவடையும்போது வெளியிடப்பட்ட கூட்டறிக்கை.

வரலாற்றுச் சிறப்புமிக்க நட்பு; முன்னேற்றத்திற்கான ஒத்துழைப்பு”

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான திரு இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுதின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி ஏப்ரல் 22, 2025 அன்று சவுதி அரேபியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.

சவுதி அரேபிய அரசுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இதுவாகும். ஜி-20 உச்சிமாநாட்டில் பங்கேற்கவும், இந்தியா-சவுதி அரேபியா பாதுகாப்பு ஒத்துழைப்புக் கவுன்சிலின் முதல் கூட்டத்திற்கு இணைந்து தலைமை தாங்கவும் 2023 செப்டம்பரில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் இந்தியாவுக்கு வருகை புரிந்ததைத் தொடர்ந்து பிரதமரின் இந்தப் பயணம் நடைபெற்றுள்ளது.

ஜெட்டாவில் உள்ள அல்-சலாம் அரண்மனையில் பிரதமர் திரு நரேந்திர மோடியைப் பட்டத்து இளவரசரும், பிரதமருமான திரு இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் வரவேற்றார். இந்தியாவும் சவுதி அரேபியாவும் வலுவான உறவையும், நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்தால் மக்களுக்கு இடையேயான நெருக்கமான உறவுகளையும் கொண்டுள்ளன. பாதுகாவல், பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், விவசாயம், கலாச்சாரம், சுகாதாரம், கல்வி. மக்களுக்கு இடையிலான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய உத்திசார் ஒத்துழைப்பின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் உறுதியான அடித்தளம் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதை இரு தரப்பினரும் குறிப்பிட்டுக் காட்டினர். பரஸ்பர ஆர்வமுள்ள தற்போதைய பிராந்திய, சர்வதேச பிரச்சனைகள் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

உலகக் கண்காட்சி 2030, ஃபிஃபா உலகக் கோப்பை 2034 ஆகியவற்றை நடத்துவதற்கான அனுமதிகளை  சவுதி அரேபியா வெற்றிகரமாக பெற்றுள்ளதற்காக சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான திரு முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத்-க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியா- சவுதி அரேபியா இடையேயான உத்திசார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தலைவர்களும் ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்தினர். இந்தியா-சவுதி அரேபியா பாதுகாப்பு ஒத்துழைப்புக் கவுன்சிலின் (எஸ்பிசி) இரண்டாவது கூட்டத்திற்கும் இரு தலைவர்களும் இணைந்து தலைமை தாங்கினர். செப்டம்பர் 2023-ல் நடந்த கடைசி கூட்டத்திற்குப் பிறகு பாதுகாப்பு ஒத்துழைப்புக் கவுன்சிலின் முன்னேற்றத்தை இரு தரப்பினரும் மதிப்பாய்வு செய்தனர். அரசியல், பாதுகாப்பு, சமூக மற்றும் கலாச்சார ஒத்துழைப்புக்கான குழு மற்றும் அவற்றின் துணைக் குழுக்கள், பொருளாதாரம் மற்றும் முதலீடு பற்றிய குழு மற்றும் பல்வேறு துறைகளில் அவற்றின் கூட்டுப் பணிக் குழுக்களின் பணிகள் குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். இந்தப் பின்னணியில், பாதுகாப்பு ஒத்துழைப்பு, சுற்றுலா மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு மீதான அமைச்சர்கள் குழுக்களைச் சேர்ப்பதன் மூலம் பாதுகாப்பு ஒத்துழைப்புக் கவுன்சிலை நான்கு அமைச்சர்கள் குழுக்களாக விரிவுபடுத்துவதை இரு நாடுகளும் வரவேற்றன. பல்வேறு அமைச்சகங்களைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான உயர்மட்ட பயணங்கள் இருதரப்பிலும் நம்பிக்கை, பரஸ்பர புரிந்துணர்வை உருவாக்கியதை இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். கூட்டத்தின் முடிவில், இந்தியா-சவுதி அரேபியா பாதுகாப்பு ஒத்துழைப்புக் கவுன்சிலின் இரண்டாவது கூட்டத்தின் நடவடிக்கைக் குறிப்புகளில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

சவுதி அரேபியாவில் வசிக்கும் சுமார் 27 லட்சம் இந்தியர்களின் நலனுக்காக சவுதி தரப்புக்கு இந்திய தரப்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் வலுவான  பிணைப்பு, மக்களிடம் உள்ள அளப்பரிய நல்லெண்ணத்தை பிரதிபலிக்கிறது. 2024-ம் ஆண்டில் ஹஜ் யாத்திரையை வெற்றிகரமாக நடத்தியதற்காக சவுதி அரேபியாவுக்கு இந்திய தரப்பு வாழ்த்து தெரிவித்ததுடன், இந்திய ஹஜ், உம்ரா யாத்ரீகர்களுக்கு வசதி செய்வதில் இரு நாடுகளுக்கும் இடையிலான சிறந்த ஒருங்கிணைப்புக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சமீப ஆண்டுகளில் இந்தியா மற்றும் சவுதி அரேபிய அரசுக்கு இடையே பொருளாதார உறவுகள், வர்த்தகம், முதலீட்டு உறவுகள் வளர்ந்து வருவதை இருதரப்பும் வரவேற்றன. தொலைநோக்குத் திட்டம் 2030-ன் கீழ் இலக்குகளை எட்டுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்காக சவுதி தரப்புக்கு இந்தியத் தரப்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கும், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை எட்டவும் சவுதி தரப்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பரஸ்பர நலன்கள் கொண்ட துறைகளில் தத்தமது தேசிய இலக்குகளை நிறைவேற்றவும், பகிரப்பட்ட வளத்தை அடையவும் இணைந்து பணியாற்ற இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையே முதலீட்டை ஊக்குவிப்பதற்காக 2024-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட உயர்மட்ட பணிக்குழுவின் கீழ் நடைபெற்ற விவாதங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். எரிசக்தி, பெட்ரோ ரசாயனம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், நிதிசார் தொழில்நுட்பம், டிஜிட்டல் உள்கட்டமைப்பு, தொலைத்தொடர்பு, மருந்துகள், உற்பத்தி, சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான சவுதி அரேபியாவின் முயற்சியை அடிப்படையாகக் கொண்டு, உயர்மட்ட பணிக்குழு பல துறைகளில் புரிதலுக்கு வந்துள்ளது.  இது முதலீட்டுப் பாய்ச்சலை விரைவாக ஊக்குவிக்கும். இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவுவதில் ஒத்துழைக்க உயர்மட்ட பணிக்குழுவில் ஏற்பட்ட உடன்பாட்டை அவர்கள் குறிப்பிட்டனர். வரிவிதிப்பு போன்ற துறைகளில் இந்தப் பணிக்குழு அடைந்துள்ள முன்னேற்றம், எதிர்காலத்தில் ஒத்துழைப்பை அதிகரிக்க ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை விரைவில் முடிக்க இரு தரப்பினரும் விருப்பம் தெரிவித்தனர். பொது முதலீட்டு நிதியத்தில் இந்தியப் பிரிவு தொடங்கப்பட்டதற்கு இந்திய தரப்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பரஸ்பர பொருளாதார வளர்ச்சி, கூட்டு முதலீடுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் இந்தியா – சவுதி அரேபியா இடையே வளர்ந்து வரும் பொருளாதார ஒத்துழைப்பை இந்த உயர்மட்ட பணிக்குழுவின் பணிகள் சுட்டிக் காட்டுகின்றன என்று  இரு தரப்பினரும் குறிப்பிட்டனர்.

நேரடி மற்றும் மறைமுக முதலீட்டு பங்களிப்பை வலுப்படுத்த இரு தரப்பினரும் உறுதிபூண்டனர். 2023 செப்டம்பரில் புதுதில்லியில் நடைபெற்ற சவுதி-இந்தியா முதலீட்டு மன்றத்தின் முடிவுகளையும், இரு நாடுகளின் பொது, தனியார் துறைகளுக்கு இடையே அது அடைந்த தீவிர ஒத்துழைப்பையும் அவர்கள் பாராட்டினர். சவுதியில் இந்திய நிறுவனங்களின் முதலீட்டு நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதை அவர்கள் பாராட்டியதுடன், பரஸ்பர முதலீடுகளை அதிகரிப்பதில் தனியார் துறையின் பங்களிப்பையும் பாராட்டினர். சவுதி அரேபிய முதலீட்டு அமைச்சகம் இடையே இருதரப்பு முதலீட்டை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பு கட்டமைப்பை செயல்படுத்துவதை இரு தரப்பினரும் வேண்டும் மதிப்பிட்டனர். பரஸ்பர வளர்ச்சி மற்றும் புத்தாக்கப் படைப்புகளுக்கு பங்களிக்கும் வகையில் புத்தொழில் சூழலில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இருதரப்பும் ஒப்புக் கொண்டன.

Leave a Reply