இந்தியாவின் படைப்பாற்றல் திறனை அடுத்த கட்டத்திற்கு வேவ்ஸ் உச்சி மாநாடு எடுத்துச் செல்லும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்.

இந்தியாவின் படைப்பாற்றல் திறனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக வேவ்ஸ்  (உலக ஒலி, ஒளி, மற்றும் பொழுதுபோக்கு) உச்சி மாநாடு அமையும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற தூர்தர்ஷன் சென்னை (டிடி தமிழ்) தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்தார். மேலும் படைப்பாற்றல் பொருளாதாரம் இந்திய பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், பேசிய அவர், டிடி தமிழ் தொலைகாட்சி, தமிழ்நாட்டின் கலை , கலாச்சாரம், பண்பாட்டு மதிப்பீடுகளை காக்கும் அரும்பணியை செய்துவருவதாகவும் காலத்தால் அழியாத பல நினைவலைகளை நம்முள்ளே விதைத்துள்ளது என்றும் கூறினார். மேலும், தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் செய்திகள் நூறு சதவீதம் உண்மைத் தகவல்களையும் நம்பகத்தன்மையையும் கொண்டவை என்றும் அவர் பாராட்டுத் தெரிவித்தார். இன்றைய நவீன காலத்துக்கு ஏற்றார்போல் தொழில்நுட்ப வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

இந்திய அரசின் பொது சேவை ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷன் அரசின் செய்திகளையும், மக்களுக்கான நலத் திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மிக முக்கியப்  பங்காற்றுவதாக அவர் தெரிவித்தார். குடியரசுத் தலைவர் நிகழ்ச்சிகள், பிரதமரின் நிகழ்ச்சிகள், குடியரசு தின விழா, சுதந்திர தின விழா போன்ற நிகழ்ச்சிகளை நேரலையில் தூர்தர்ஷனில் மட்டுமே காண முடியும் என்றும் அவர் கூறினார். இந்திய பாரம்பரியத்தையும், இந்திய பெருமையும், இந்திய கலாச்சாரத்தையும் நிலை நிறுத்தும் வகையில் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருவதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply