மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானின் பிரேசில் பயணம் பல விஷயங்களில் முக்கியத்துவம் பெற்றதாக அமைந்துள்ளது.

மத்திய வேளாண், விவசாயிகள் நலத் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் தமது பிரேசில் பயணத்தை முடித்துக்கொண்டு நாளை (21.04.2025 -திங்கள்கிழமை) காலை புதுதில்லி திரும்புகிறார். அவரது பிரேசில் பயணம் பல விஷயங்களில் முக்கியமானதாக அமைந்துள்ளது. 15-வது பிரிக்ஸ் வேளாண் அமைச்சர்கள் கூட்டத்தில் இந்திய தூதுக்குழுவுடன் அவர் பங்கேற்றார். அமைச்சரின் பயணம் இந்தியா – பிரேசில் இடையே வேளாண் வர்த்தகம், தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகளை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படியாக அமைந்தது. உலகளாவிய தொழில்நுட்பங்களின் பயன்களை இந்திய விவசாயிகளுக்கு வழங்குவதன் மூலம் அவர்களது வாழ்க்கையை மேம்படுத்த முடியும் என்று அமைச்சர் கூறினார். பல்வேறு நாடுகளின் கூட்டு முயற்சிகள் உலகளாவிய உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

தமது பிரேசில் பயணத்தின்போது, மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் முக்கியமாக இந்தியாவின் சிறு விவசாயிகள் தொடர்பான தமது கவலைகளை வெளிப்படுத்தினார். சிறு விவசாயிகள் பாதுகாக்கப்பட்டு அதிகாரம் அளிக்கப்படாவிட்டால், உலகளாவிய உணவுப் பாதுகாப்பு என்ற இலக்கு முழுமையடையாது என்று அவர் கூறினார். உள்ளடக்கிய, சமமான, நிலையான விவசாயத்திற்கு இந்தியா முழுமையாக உறுதிபூண்டுள்ளது என்று அமைச்சர் கூறினார். வேளாண் தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள், திறன் மேம்பாடு, வர்த்தக வசதி ஆகியவற்றில் உலக நாடுகள் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். இதன் மூலம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விவசாயிகளும், வேளாண் நிறுவனங்களும் பயனடைய முடியும் என அவர் கூறினார். பிரிக்ஸ் தளத்தில், வேளாண் தொழில்நுட்ப பரிமாற்றம், ஆராய்ச்சி, உணவு பதப்படுத்துதல், வர்த்தகம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இந்தியா விரும்புவதாக அவர் கூறினார். இந்தியாவின் சார்பில் திரு சௌகான் ஆற்றிய உரை, உலகளாவிய உணவுப் பாதுகாப்பு, சிறு விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல், வேளாண் கண்டுபிடிப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, பிரிக்ஸ் நாடுகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாக அமைந்தது.

பிரேசிலியாவில் நடைபெற்ற 15-வது பிரிக்ஸ் வேளாண் அமைச்சர்கள் கூட்டத்தில், இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா, தென்னாப்பிரிக்கா, சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான் உள்ளிட்ட பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் வேளாண் அமைச்சர்கள் / மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முக்கிய கருப்பொருள் “பிரிக்ஸ் நாடுகளிடையே ஒத்துழைப்பு, கண்டுபிடிப்பு, சமமான வர்த்தகம் ஆகியவை மூலம் உள்ளடக்கிய, நிலையான விவசாயத்தை ஊக்குவித்தல்” என்பதாகும்.

உயிரி எரிபொருள், உயிரி எரிசக்தி, விநியோகச் சங்கிலி ஒருங்கிணைப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு குறித்தும் கூட்டங்களின் போது விவாதிக்கப்பட்டது. இது இந்திய விவசாயிகளுக்கு உலகளாவிய தொழில்நுட்பத்தை அணுக உதவும். ஒட்டுமொத்தமாக, திரு சௌகானின் பிரேசில் பயணம், உற்பத்தி அதிகரிப்பு, இந்திய விவசாயத்தில் உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவற்றை நோக்கிய ஒரு உறுதியான முன்முயற்சியாகும்.

Leave a Reply