வேவ்ஸ் உச்சி மாநாட்டையொட்டி மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஊடக நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தினார்.

படைப்பாளிகளின் உலகமும் அவர்களின் பொருளாதாரமும் ஒரு அடிப்படை மாற்றத்தை சந்தித்து வருகிறது. 2025 மே 1 முதல் 4 வரை மும்பையில் நடைபெறவுள்ள முதல் உலக ஒலி ஒளி பொழுதுபோக்கு உச்சிமாநாடான வேவ்ஸ்-சை ஒட்டி

செய்தி ஊடகங்களுடன் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலில் தேசிய, பிராந்திய செய்தி ஊடகங்களைச் சேர்ந்த சுமார் 20 ஊடக நிறுவனங்கள் கலந்து கொண்டன.

இதில் பேசிய மத்திய அமைச்சர், ஊடக உலகின் வடிவம் மாறி வருகிறது என்று கூறினார். புதிய நடைமுறைகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஒரு உள்ளடக்கத்தை உருவாக்க ஒரு பெரிய ஸ்டுடியோ தேவைப்பட்ட நிலை இப்போது இல்லை என்று கூறினார். இன்று தொலைதூர கிராமத்திலிருந்தும் கூட ஒரு படைப்பாளி நல்ல தரத்துடன் படைப்புகளை உருவாக்க முடியும் எனவும் பல லட்சக் கணக்கான பார்வைகளை அந்த படைப்பு பெற முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

படைப்பாளிகளின் பொருளாதாரம் அதிவேகமாக வளர்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். ஊடக, பொழுதுபோக்குக்கான உலகளாவிய தளமாக வேவ்ஸ்-சை உருவாக்க அரசு விரும்புகிறது என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியாவின் படைப்பாற்றல் பொருளாதாரம் மிகப்பெரிய ஊக்கத்தைப் பெற்றுள்ளது என அவர் தெரிவித்தார். வேவ்ஸ் 2025 தொடர்பான போட்டிகளுக்கு, 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவுகள் வந்துள்ளதாகவும் வளர்ந்து வரும் உலகளாவிய ஊடக, பொழுதுபோக்கு சூழலில் சிறந்த பங்களிப்புகளை வழங்குபவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும் எனவும் திரு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். உலகத்தை படைப்பாளர்களுடன் இணைக்கும் வழியாக வேவ்ஸ் செயல்படும் என்றும், படைப்பாளிகள், ஊடக – பொழுதுபோக்கு தொழில் துறையினர், பொழுதுபோக்கு சந்தைகள் ஆகியவற்றுக்கு இடையேயான உலகளாவிய இணைப்பாக வேவ்ஸ் உருவாகி வருகிறது என்று அமைச்சர் கூறினார். வேவ்ஸ் மூலம், பொழுதுபோக்கு தொழில் துறையினர் ஒரு தளத்தைப் பெறுகிறார்கள் எனவும் இதில் படைப்பாளிகள் தங்கள் உள்ளடக்கத்தை வழங்கலாம் எனவும் நிறுவனங்கள் தரமான படைப்பு படைப்புகளை வணிகமயமாக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற பல்வேறு ஊடக நிறுவனங்களின் முன்னணி பிரதிநிதிகள், கொள்கை வகுப்பாளர்கள், படைப்பாளிகள், தொழில்துறையினர், தொழில்நுட்பத் துறையினர் வேவ்ஸ் வடிவில் ஒரு புதுமையான கருத்தாக்கத்தை உருவாக்கியதற்காக மத்திய அரசுக்குப் பாராட்டு தெரிவித்தனர்.

தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு பங்கேற்பாளர்களையும் பிரமுகர்களையும் வரவேற்று, இந்தக் கூட்டு உரையாடலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

Leave a Reply