தமிழக அரசு திருக்கோயிலுக்குச் சொந்தமான வீடுகள், மனைகள், கடைகள் மற்றும் காலியிடங்கள் ஆகியவற்றிற்கு 2007 மற்றும் 2010 ல் தமிழக அரசு அறிவித்த அரசாணைகள் படி வாடகையை அமல்படுத்த வேண்டும்!- ஜி.கே‌.வாசன் வலியுறுத்தல்.

 இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயிலுக்குச் சொந்தமான வீடுகள், மனைகள், கடைகள் மற்றும் காலியிடங்கள் ஆகியவற்றிற்கு வாடகையை நியாயமாக நிர்ணயம் செய்ய வேண்டும்.

அதாவது கோயில் நில வாடகை சம்பந்தமாக தமிழக அரசானது 1998 ல், 1999 ல், 2000 ல், 2001 ல் அரசாணை வெளியிட்டு, வாடகை நிர்ணயக் கோட்பாடுகள் வகுத்தும், திருத்தங்கள் செய்தும் 2003 முதல் அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து 2007 ல் திருத்தங்களுடன் தீர்மானிக்கப்பட்டு உரிய அரசாணை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

                அதன்படி திருக்கோயிலுக்குச் சொந்தமான மனைகள் மற்றும் கட்டிடங்களில் குடியிருந்து வருபவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வாடகை விகிதம் அதிகமாக உள்ளது என்பதை கருத்தில் கொண்டு  குடியிருப்பவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள நியாய வாடகை விகிதமான 0.20 விழுக்காட்டினை 0.10 விழுக்காடாக குடியிருப்பாக பயன்படுத்தும் இனங்களில் மட்டும் குறைத்து சீரமைக்கலாம் என்றும், மேலும் பொதுவாக அனைத்து இனங்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்யப்படும் நியாய வாடகை உயர்வான 33.3 விழுக்காட்டினை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 15 விழுக்காடாக குறைத்து நிர்ணயிக்கலாம் என்றும், இந்த வாடகை விகிதத்தை 2001 ஆம் ஆண்டு நில மதிப்பு நிலவரத்தின் அடிப்படையில் கணக்கிட்டு, 2001 ஆம் ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 15 விழுக்காடு அளவில் வாடகையை உயர்த்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

                 ஆனால் தமிழ் வளர்ச்சி-பண்பாடு மற்றும் அறநிலையத்துறை மூலம் நிர்ணயிக்கப்பட்ட வாடகை, வாடகை உயர்வானது திருக்கோயிலுக்குச் சொந்தமான வீடுகள், மனைகள், கடைகள் மற்றும் காலியிடங்கள் ஆகியவற்றிற்கு வாடகை செலுத்துவோருக்கு மிகவும் பொருளாதார சிரமத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

              இந்நிலையில் 2007 மற்றும் 2010 ல் தமிழகத்தில் ஆட்சி செய்த அரசு அறிவித்த அரசாணைகள் படி, கோயில் நிலம் சம்பந்தமாக அறிவுறுத்திய வாடகையை தற்போது அமல்படுத்த வேண்டும் என்ற கோயில் நிலத்திற்கு வாடகை செலுத்துவோரின் கோரிக்கையை தற்போதைய தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

              மேலும் தமிழக அரசு சென்னை மவுண்ட் ரோடு பச்சை அம்மன் கோயில் நிலத்தில் 40 ஆண்டுகளாக குடியிருக்கும் 300 குடும்பத்தினரின் பெயரில் இருந்த மின் இணைப்பை முன் அறிவிப்பின்றி கோயில் பெயருக்கு மாற்றியதை ரத்து செய்து குடியிருப்போரின் பெயரிலேயே மின் இணைப்பை வழங்க வேண்டும் என்றும் தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply