ஏற்காட்டில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட தடுப்பணைகள் இடிப்பு! -அதிகாரிகள் அலட்சியத்தால் ஸ்டே வாங்கிய எஸ்டேட் அதிபர்கள்!

???????????????????????????????

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உள்ள காபி எஸ்டேட்டில் சட்டவிரோதமாக தடுப்பணைகள் கட்டப்பட்டு நீர் திருடப்படுவதாக வந்த தகவலை அடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கடந்த சில நாட்களாக ஆய்வு நடத்தப்பட்டு சுமார் 50 தடுப்பணைகள் கட்டிய எஸ்டேட் அதிபர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதையடுத்து முறையான விளக்கம் கொடுக்காத அனைத்து தடுப்பணைகளையும், 15.12.2014  அன்று இடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதையடுத்து சேலம் மாவட்டத்தில் உள்ள 4 ஆர்.டி.ஒ மற்றும் 12 டெபுடி கலெக்டர்கள் உள்ளிட்ட 12 குழுக்கள் அமைக்கப்பட்டு, வருவாய் துறை, மின்சாரவாரியத்துறை, வனத்துறை உள்ளிட்ட 8 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் 600 பேர் கொண்ட குழு, 15.12.2014  அன்று ஏற்காட்டில் உள்ள அனைத்து சட்ட விரோத தடுப்பணைகளையும் இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் காலை முதலே தடுப்பணை இடிக்கும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் எஸ்டேட் அதிபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவந்தனர்.  ஆனாலும் மாவட்ட ஆட்சியர் உத்தரவை அடுத்து வருவாய் துறையினர் சட்ட விரோத தடுப்பணைகளை இடித்துவந்தனர்.

ஆனால், ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகளின் அலட்சிய போக்கால் ஜே.சி.பிகள் அனைத்தும் வெளி வேலைக்கு அனுப்பப்பட்டது.  இதனால் போதிய ஜே.சி.பி இல்லாமல் தடுப்பணை உடைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்றது.

இதனிடையே எஸ்டேட் அதிபர்கள் நீதிமன்றத்தை அணுகி தடையாணை பெற்றதால், மாலையில் தடுப்பணை உடைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

-நவீன் குமார்.