எனக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசாரால், என் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என அஞ்சுகிறேன்: பிரதமர் நரேந்திர மோதியின் மனைவி ஜசோதா பென், போலீஸ் கண்காணிப்பாளரிடம் மனு! (படங்கள்)

 narendra modi

PM Narendra Modi's wife Jashodaben

பிரதமர் நரேந்திர மோதியின் மனைவி ஜசோதா பென் கடந்த 43 ஆண்டுகளாக நரேந்திர மோதியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

கடந்த 1968-ம் ஆண்டு நரேந்திர மோதிக்கும், ஜசோதா பென்க்கும் திருமணம் நடந்தது. மூன்று ஆண்டுகள் மட்டுமே நரேந்திர மோதி வீட்டில் வசித்து வந்த அவர், பின் தந்தை வீட்டுக்குச் சென்று ஆசிரியர் பயிற்சி முடித்து குஜராத் மாநிலம், வட்காம் மாவட்டத்தில் உள்ள ரஜோசனா கிராமத்தில் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு  முன் பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவர் தொடர்ந்து 43 ஆண்டுகளாக கணவர் நரேந்திர மோதியை பிரிந்தே வாழ்ந்து வந்தார். 

தனக்கு திருமணம் ஆனது குறித்தோ, தனக்கு   மனைவி இருப்பது குறித்தோ நரேந்திர மோதி 42 ஆண்டுகாலம் வாய் திறக்கவே இல்லை.

இந்நிலையில் நரேந்திர மோதி திருமணம் ஆனவர், அவரது மனைவி உயிரோடுதான் இருக்கிறார் என்ற விபரத்தை காங்கிரஸ் கட்சிக்காரர்கள் ஆதாரப்பூர்வமாக ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

Narendra Modi BJP

Narendra Modi BJP.png1

இதனால் வேறு வழியில்லாமல், தான் திருமணம் ஆனவர் என்றும், மனைவி தன்னோடு இல்லையென்றும், அதனால் அவருடைய வருமானம் பற்றியோ,  சொத்துக்கள் பற்றியோ தனக்கு எதுவும் தெரியாது என்றும், கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது தனது வேட்பு மனுவில் நரேந்திர மோதி தெரிவித்தார். இது அப்போது மிகப் பெரிய விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோதியின் மனைவி ஜசோதா பென் மும்பையில் வசிக்கும் தன் உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக கடந்த இரு தினங்களுக்கு முன்பு வந்திருந்தார். அவர் 22.11.2014 அன்று அங்கிருந்து குஜராத் புறப்பட்டு சென்றார்.

அதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ஜசோதா பென், கணவருடன் சேர்ந்து வாழவேண்டும் என்ற ஆசை இப்போதும் எனக்கு இருக்கிறது. இருப்பினும் அதற்கான அழைப்பு அவரிடம் இருந்து வரவேண்டும். அவரே அழைத்தால் மட்டும் தான் செல்வேன் என கூறினார்.

Indian Prime Minister Narendra Modi's wife, Jashodaben1

Indian Prime Minister Narendra Modi's wife Jashodaben

இந்நிலையில், முன்னாள் பிரதமர் இந்திராவை, அவரின் பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றது போல, எனக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசாரால், என் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என அஞ்சுகிறேன் என்றும், எனக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது ஏன்…? எந்த அடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்படுகிறது? என, பிரதமர் நரேந்திர மோதியின் மனைவி ஜசோதா பென், குஜராத், மெக்சனா மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் மொதாலியாவை நேரில் சந்தித்து தகவல் உரிமை சட்டம் மூலம் விளக்கம் கேட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். 

Jashoda

தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், அவர் கோரியுள்ள விவரம்:

பிரதமரின் மனைவி என்ற முறையில், எனக்கு உள்ள உரிமைகள் என்ன? எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது ஏன்? எந்த அடிப்படையில், பாதுகாப்பு வழங்கப்படுகிறது? இந்திய அரசியல் சட்டத்தின் எந்த விதிகளின் கீழ், பிரதமரின் மனைவிக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது? எனக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசார், நான் பஸ்சில் பயணம் செய்தால் கூட, காரில் பின் தொடர்கின்றனர். இது, எனக்கு அதிருப்தி அளிப்பதாக உள்ளது.

முன்னாள் பிரதமர் இந்திரா தன் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதுபோல, எனக்கு பாதுகாப்பு தரும் போலீசாரால், என் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என, அஞ்சுகிறேன்.

எனவே, என் வீட்டிற்கு பாதுகாப்புக்கு வரும் ஒவ்வொரு போலீசாரிடமும், அவர்கள் பாதுகாவல் பணியில் ஈடுபடுவதற்காக, பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் நகல் இருக்க வேண்டும். அவர்கள் அந்த நகலை வைத்திருக்கும்படி, அரசு கேட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் கோரியுள்ளார்.

இது பாதுகாப்பு தொடர்பான மனு என்பதால் தகவல் உரிமை சட்டத்தின் படி இதற்கு 48 மணி நேரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும்.

பிரதமரின்  மனைவி மனுவிற்காவது உரிய காலகெடுவிற்குள் பதில் அளிப்பார்களா? இல்லை வழக்கம்போல கன்னித் தீவு கதையாக இழுத்தடிப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in