கருநாடகா மாநிலத்தில் ஜெ.ஜெயலலிதாவிற்கு நீதி கிடைக்குமா? ஜாமீன் மனுவை விசாரிக்காமலேயே, வழக்கமான டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றிய விடுமுறை கால நீதிபதி ரத்னகலா!

Hon'ble Mrs. Justice Rathnakala

Hon’ble Mrs. Justice Rathnakala

குற்றப்பிரிவு முறையீடுகள் (Criminal Appeals), குற்றவியல் திருத்த மனுக்கள் (Criminal Revision Petitions), குற்றவியல் மனுக்கள் (Criminal Petitions) மற்றும் குற்றவியல் விவகாரங்களில் அவசர பயன்பாடுகள் கருதி அளிக்கப்படும் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி தகுந்த நீதி பரிபாலணம் வழங்குவதற்காகதான் நீதிமன்றங்களில் விடுமுறை கால நீதிபதிகள் நியமிக்கபடுகின்றனர்.

ஆனால், முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு, முக்கியத்துவம் இல்லாத வழக்கு என்று நொண்டி சாக்கு சொல்லி, தங்கள் கடமைகளை விடுமுறை கால நீதிபதிகள் தட்டிகழித்து செல்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு, நீண்டகாலமாக நீதிதுறையில் இருந்து வருகிறது. அது உண்மைதான் என்பது ஜெ.ஜெயலலிதா வழக்கில் இன்று மீண்டும் ஒருமுறை நிரூப்பிக்கப்பட்டுள்ளது.

ஜெ.ஜெயலலிதா ஜாமீன் மனுவை விசாரிக்காமலேயே, வழக்கமான மேல் முறையீட்டு மனுக்களை விசாரிக்கும் டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றி விடுமுறை கால நீதிபதி ரத்னகலா இன்று உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடக நீதிமன்றங்கள் தசரா விடுமுறையில் இருப்பதால், விடுமுறை முடிந்து அக்டோபர் 7ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெ.ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று (01.10.2014) காலை 10.30 மணியளவில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் விடுமுறை கால நீதிபதி ரத்னகலா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெ.ஜெயலலிதா சார்பாக வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜரானார். அரசுத் தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜரானார்.

அரசுத் தரப்பின் சார்பில் மனுத்தாக்கல் செய்கிறீர்களா என நீதிபதி கேட்டதும், தான் தயாராக இருப்பதாக பவானி சிங் தெரிவித்தார். ஜாமீன் வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

Honble Justice RATHNAKALA orderஉடனடியாக நீதிபதி, இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக இருப்பதால், இதனை தான் விசாரிக்க முடியாது என்றும், வழக்கமாக மேல் முறையீடுகளை விசாரிக்கும் நீதிமன்ற அமர்வுக்கு மாற்றுவதாகவும் உத்தரவிட்டார். இது எந்த வகையில் நியாயம்? இதற்கு பெயர்தான் விடுமுறை கால நீதிமன்றமா?

ஜாமீன் மனுவை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்றால், உயர் நீதிமன்ற பதிவாளரை அணுகலாம் என்று நேற்று கூறியதும் இவர்தானே? அந்த வழிகாட்டுதலின் அடிப்படையில்தானே இந்த ஜாமீன் மனு உயர் நீதிமன்ற பதிவாளரிடம் சமர்பிக்கப்பட்டது. இடையில் 12 மணி நேரத்திற்குள் என்ன நடந்தது? இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்று கூறும் நீதிபதி, இதை மிகுந்த அக்கறையோடுதானே அணுக வேண்டும்? விடுமுறை கால நீதிமன்றத்தின் உண்மையான நோக்கமும் அதுதானே? வழக்கை விசாரிக்காமலேயே ஒத்தி வைத்தது கர்நாடக உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை என்று சொல்லப்படுகிறதே, இதற்கு காரணம் என்ன?

இதையெல்லாம் பார்க்கும்போது இந்த தீர்ப்பே உள்நோக்கம் கொண்டது என்பது தெளிவாக தெரிகிறது. கருநாடகா மாநிலத்தில் ஜெ.ஜெயலலிதாவிற்கு நீதி கிடைக்குமா? என்பது சந்தேகமாக உள்ளது.

காவிரி நதிநீர்பிரச்சனையில் தமிழக மக்களின் உரிமைகளை மீட்பதற்காக கருநாடகா மாநில அரசை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போரட்டம் நடத்தி காவிரி நடுமன்ற உத்தரவை அரசிதழில் வெளியிட வைத்து சரித்திரச் சாதனை படைத்தவர் ஜெ.ஜெயலலிதா. அதற்காகதான் ஜெ.ஜெயலலிதா இப்படி அவமானப்படுத்தப்படுகிறார் என்ற சந்தேகம் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது.

மேலும்,எக்காலத்திலும் தமிழக மக்கள் மனதை வெற்றி கொண்டு ஆட்சி அமைக்க முடியாது என்பதை நாடாளுமன்ற தேர்தலின் தோல்வியின் மூலம் உணர்ந்து கொண்ட அவரது அரசியல் எதிரிகள் ஜெ.ஜெயலலிதாவை அரசியலில் இருந்தும், ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் நிரந்தரமாக அப்புறப்படுத்த வேண்டும் என்று தீட்டிய மிகப் பெரிய சதி திட்டத்திற்கு இந்த வழக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

நடுநிலைமை, நீதி என்பது வெறும் துலாக்கோல் போன்றதாக இருத்தல் கூடாது, செம்பொன்னை நிறுக்கும் துலாக்கோல் போலத் துல்லியமானதாகவும் இருத்தல் வேண்டும். இதைதான் “செம்பொன் துளைத்தாலம் அன்ன தனிநிலை தாங்கிய’ என்று கம்பன் கூறுகின்றான்.

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி என்று திருவள்ளுவரும் கூறுகின்றார்.

உலகத்தின் போக்கு முழுவதும் நீதியின் மீதே ஆதாரப்பட்டிருக்கிறது. எனவே, உலகத்தின் போக்கு சரிவர இருக்கவேண்டும் என்றால் தண்டனை வழங்கும் விஷயத்தில் நீதிபதிகள் மிக சரியாக இருக்க வேண்டும்.

கடுமையான தண்டனை: மக்களிடத்தில் பயத்தையும், தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள் மீது வெறுப்பையும் உருவாக்கும். மென்மையான தண்டனை வழங்கும் நீதிபதிகளை மக்கள் புறக்கணிப்பார்கள், குற்றத்திற்கு ஏற்றவாறு தேவையான அளவிற்கு தண்டனை வழங்குபவர்களைத் தான் மக்கள் போற்றிப் புகழ்வார்கள்.

எனவே, கருநாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலையிட்டு ஜெ.ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும். அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லையென்றால் காவல்துறைக்கும், நீதிதுறைக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் போய்விடும்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in