முன்னாள் தி.மு.க. அமைச்சர் கே.என்.நேரு அலுவலகத்தில் 5 மணி நேரம் காத்திருந்த தேர்தல் அதிகாரிகள்!

k.n.nehruமுன்னாள் தி.மு.க. அமைச்சரும், திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.என்.நேரு அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்த சென்றனர்.

திருச்சி, தில்லைநகர் 10-வது கிராஸில் உள்ள நேருவின் அலுவலகத்திற்கு, நேற்றிரவு (22.04.2014) 11 மணிக்கு சென்ற தாசில்தார் கணேசன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் குழு சோதனை நடத்துவதாக தெரிவித்தனர்.

அப்போது அங்கிருந்த நேருவின் உதவியாளர் முத்துச்செல்வம், புதுக்கோட்டை கூட்டம் முடித்து ஸ்டாலினை சென்னைக்கு அனுப்பிவிட்டு அண்ணன் (நேரு) அசந்து உள்ளே தூங்குவதாக சொல்லி 5 மணி நேரம் அதிகாரிகளை காக்க வைத்துள்ளார்.

அலுவலகத்திற்கு உள்ளே சோதனை நடத்தியே ஆகவேண்டும் என அதிகாரிகள் பலமுறை சொல்லியும், நேருவின் உதவியாளர் முத்துச்செல்வம் அதிகாரிகளை உள்ளே செல்ல விடாமல் தடுத்துள்ளார்.

இன்று (23.04.2014) அதிகாலை 4 மணி வரை அங்கேயே தேர்தல் அதிகாரிகள் காத்து கிடந்தனர். தூக்கம் கலைந்து வெளியே வந்த நேரு, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளைப் பார்த்து, நாங்கள் புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கமாட்டேன் என்கிறீர்கள். இப்போது எங்கள் இடத்தை சோதனைப் போட வந்துவிட்டீர்களா? என்று ஏக வசனத்தில் பேசியிருக்கிறார்.

அதன் பிறகு அலுவலகத்திற்கு உள்ளே சென்ற அதிகாரிகள், ஒப்புக்காக சோதனை நடத்தி விட்டு ஒரு வழியாக திரும்பி வந்தனர். சோதனைக்காக சென்ற இடத்தில் 5 மணிநேரம் காத்திருந்தால் அதன் பிறகு அங்கு என்ன கிடைக்கும்? இது தான் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் லட்சணமா?

இ.ராஜ்