நாட்டு மக்களின் வாழும் உரிமையை பறிக்கும் ஆதார் அட்டையை சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி உடனே இரத்து செய்ய வேண்டும்: திருச்சிராப்பள்ளி மக்களவை சுயேட்சை வேட்பாளர் Dr.துரைபெஞ்சமின் அறிக்கை.

டாக்டர்-துரைபெஞ்சமின்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ந்தேதி நடைபெறவிருக்கும் இந்திய பாராளுமன்றத் தேர்தலில் திருச்சிராப்பள்ளி மக்களவை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக காலணி – Chappals (செருப்பு) சின்னத்தில் களமிறங்கியுள்ள உள்ளாட்சித்தகவல் ஊடகத்தின் ஆசிரியர் Dr.துரைபெஞ்சமின் அவர்கள், நாட்டு மக்களின் நடைமுறை வாழ்க்கையில் ஒட்டு மொத்த பிரச்சனைகளுக்கும், குழப்பங்களுக்கும் காரணமாக இருக்கும் ஆதார் அட்டையை, அடியோடு இரத்து செய்ய வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

சாதாரண மனிதனின் அடையாளம் என்று சொல்லி, தனி நபர்களின் கண்விழி, கைரேகை ஆகியவற்றை பதிவு செய்து, சொந்த நாட்டு மக்களையே உளவு பார்க்கும் ஆதார் அட்டை பயன்பாட்டை, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி உடனே இரத்து செய்ய வேண்டும்.

ஏன் ஆதார் அட்டையை இரத்து செய்ய வேண்டும்?- இதோ அதற்கான காரணங்கள்:

நாட்டு மக்களின் நடைமுறை வாழ்க்கையில் ஒட்டு மொத்த பிரச்சனைகளுக்கும், குழப்பங்களுக்கும் ஆதார் அட்டைதான் காரணம். இந்தியாவில் 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 17 இலட்சத்து 73 ஆயிரத்தி 40 பேர் வீடற்றவர்களாக உள்ளனர் என்று அரசாங்க புள்ளி விபரங்கள் கூறுகிறது.

இவர்களில் 52.9 சதவீதத்தினர் நகர்புறங்களிலும், 47.1 சதவீதத்தினர் கிராமப்புறங்களிலும் இருக்கின்றனர். மேற்கூரையே இல்லாத அமைப்பில் உள்ளவர்களைதான் வீடற்ற குடும்பங்களாக கருதப்படுகிறது. இவர்கள் அனைவரும் வயிற்று பிழைப்பிற்காக நாடோடிகளாக இடம் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். இவர்களுக்கு நிரந்தர இருப்பிடமும், நிரந்தர முகவரியும் கிடையாது. இதனால் இவர்களுக்கு ஆதார் அட்டையும் கிடையாது. ஆதார் அட்டை இல்லை என்ற ஒரே காரணத்திற்காக, அரசு இவர்களுக்கு ரேசன் கார்டு (குடும்ப அட்டைFamily card) வழங்கவில்லை. இதனால் அரசு வழங்கும் இலவசங்கள், மானியங்கள், நலத்திட்டங்கள் மற்றும் நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள், வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம், புயல் நிவாரணம்… இப்படி எந்த உதவிகளையும் இவர்களுக்கு  அரசாங்கம் வழங்குவதில்லை.

இந்தியாவில் அகதிகளுக்கு இருக்கும் மரியாதைக் கூட, இவர்களுக்கு இல்லை என்பதை நினைக்கும் போது நெஞ்சம் பதைக்கிறது. இவர்கள் சொந்த நாட்டிலே அகதிகளைவிட கீழான நிலையில் இருக்கிறார்கள். ஏழையாக பிறந்தது இவர்கள் குற்றமா? சுதந்திரமடைந்து 72 ஆண்டுகளுக்கு மேலாகியும், இவர்களை எந்த அரசியல்வாதிகளும், எந்த ஆட்சியாளர்களும் இதுவரை கண்டுகொள்ளவில்லை என்பதை நினைக்கும் போது வியப்பாக இருக்கிறது. இதை இந்திய தேசத்தின் தேசிய அவமானமாக கருதி போர்கால அடிப்படையில் தீர்வு காணவேண்டும். அதுவரை ஆதார் அட்டையை காரணம் காட்டி இவர்களின் வாழும் உரிமைகளைப் பறிக்கக்கூடாது.

மேலும், வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு இந்த ஆதார் அட்டை பெரும் தலைவலியாக உள்ளது. ஓவ்வொரு முறை வீடு மாறும்போதும் ஆதார் அட்டை முகவரி மாற்றம், திருத்தம் என்று அலைய வேண்டியுள்ளது.

கருவறை முதல் கல்லறை வரை அனைத்து தேவைகளுக்கும் எதற்கெடுத்தாலும் ஆதார் அட்டையைதான் கேட்கிறார்கள். ஆதார் அட்டை விசியத்தில் உச்ச நீதி மன்றத்தின் உத்தரவை யாரும் கொஞ்சம்கூட மதிப்பதில்லை. வாடகை வீட்டில் வசிப்பவர்களின் வலி அதை அனுபவிக்கும் மக்களுக்கு மட்டும்தான் தெரியும். அதனால்தான் ஆதார் அட்டை பயன்பாட்டை இரத்து செய்ய சொல்கிறோம்.

ஆதார் அட்டை வழங்கப்பட்ட பிறகு நாட்டில் குற்றச் சம்பவங்கள் குறைந்து விடும், தீவிரவாதமும், தீவிரவாதிகளின் நடமாட்டமும் முற்றிலும் தடுக்கபட்டு விடும் என்றார்கள். ஆனால், அப்படி எதுவும் நடந்ததாக இதுவரை தெரியவில்லை. இந்த ஆதார் அட்டை திட்டத்திற்காக ஆயிரக்கணக்கான கோடி மக்களின் வரிப் பணம் விரையமானதுதான் மிச்சம். ‘கண்ணை விற்றுவிட்டு சித்திரம் வாங்குவதும்; குழந்தையை விற்று விட்டு தொட்டில் வாங்கும் கதையாகதான் இருக்கிறது இந்த ஆதார் அட்டைத் திட்டம்.

ஆதார் அட்டை குறித்து இவ்வளவு ஆதங்கப்படும் நீநீ மட்டும் ஆதார் அட்டை பயன்படுத்தலாமா? என்று என்னை பார்த்து நீங்கள் அனைவரும் கேட்பது புரிகிறது. இந்தியாவில் ஆதார் அட்டைக்கு இதுவரை புகைப்படமே எடுக்காதவன் நான்தான் என்பதை இங்கு பெருமையோடு பதிவு செய்ய விரும்புகின்றேன். இதனால் நான் இழந்தது ஏராளம்! மானத்தையும், உயிரையும் தவிர மற்ற எல்லாவற்றையும் இழந்து இருக்கின்றேன். நான் ஆதார் அட்டை வாங்கவில்லை என்பதால் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் எந்த சலுகைகளும் எனக்கு வழங்கப்படவில்லை. எனக்கு ஆதார் அட்டை இல்லை என்பதால் உச்சபட்சமாக என் குடும்ப அட்டையில் என் பெயரே பதிவு செய்ய மறுக்கிறது இந்த அரசாங்கம். எனக்கு அதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. நாட்டு மக்களின் வாழும் உரிமையை பறிக்கும் இந்த ஆதார் அட்டை பயன்பாட்டை  சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி சட்ட ரீதியாக உடனே இரத்து செய்ய வேண்டும்.

இதுபோன்ற அரசின் தவறான கொள்கை முடிவுகளை சரிசெய்வதற்காகதான் இந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடுகின்றேன். உச்ச நீதி மன்றத்தின் உத்தரவால்தான்  ஆதார் அட்டை  இல்லாமல் இந்த தேர்தலில் போட்டியிட முடிகிறது. ஆனால், அடுத்த தேர்தலுக்குள் இந்த ஆதார் அட்டை பயன்பாட்டை உடனே இரத்து செய்யவில்லையென்றால், அடுத்த தேர்தலில் ஆதார் அட்டை இருந்தால் மட்டும்தான் தேர்தலில் போட்டியிடவே முடியும் என்ற ஒரு நெருக்கடி நிலை அவசர பிரகடனத்தை உருவாக்கினாலும் உருவாக்குவார்கள். எனவே, நாட்டு மக்களின் வாழும் உரிமையை பறிக்கும் ஆதார் அட்டை பயன்பாட்டை உடனே இரத்து செய்ய எனக்கு வாய்பளியுங்கள்! அதற்காக 24, திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற மக்களவை உறுப்பினராக போட்டியிடும் எனக்கு காலணி- chappals (செருப்பு) சின்னத்தில் வாக்களியுங்கள்.

இவ்வாறு Dr.துரைபெஞ்சமின் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கே.பி.சுகுமார்.

 

மாட்டு வண்டிகளில் மணல் எடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும்: திருச்சிராப்பள்ளி மக்களவை சுயேட்சை வேட்பாளர் Dr.துரைபெஞ்சமின் அறிக்கை.
தமிழகம் வந்த தலைமை தேர்தல் ஆணையர்களிடம் அரசியல் கட்சினர் புகார்! -மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை.

Leave a Reply