தேர்தலை புறக்கணிப்பதாக போஸ்டர் ஒட்டிய கிராம மக்கள்!

சேலம் மாவட்டம், ஏற்காடு டவுன் பகுதியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் செந்திட்டு, காளிக்காடு, அரங்கம், சின்னேரிக்காடு, வசும்பேரிக்காடு, பெரிய வீட்டுக் களம், சின்ன வீட்டுக் களம், சின்னமதூர், பெரிய மதூர், கொயிலாங்காடு, பெலாக்காடு, மலையங்காடு, சுண்டக்காடு, எறங்காடு, குட்டமாத்திக்காடு, கேலையூர், மாவூத்து ஆகிய 17 கிராமங்கள் உள்ளன.

கொட்டச்சேடு கிராமத்தில் இருந்து மேனாங்குழி மேடு வழியாக செந்திட்டு வரை உள்ள 3 கிலோ மீட்டர் மண் சாலையை தார் சாலையாக்கினால், இந்த 17 கிராம மக்களும் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு 15 கிலோ மீட்டருக்கு அதிகமான தூரத்தை சுற்றி வர தேவையில்லை.

எனவே இந்த 3 கிலோ மீட்டர் சாலையை தார் சாலை அமைக்க கோரி 17 கிராம மக்களும், ஏற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது இது குறித்து மேல் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி, வட்டாட்சியர் முருகேசன் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் மக்கள் கலைந்து சென்றனர்.

தற்போது வரை சாலை பணிகள் துவங்காததால், வாக்களித்து என்ன பயன் எனக் கேட்டு, 17 கிராம மக்களும் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக போஸ்டர் அச்சடித்து ஏற்காடு பகுதிகளில் ஒட்டியுள்ளனர். 17 கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக போஸ்டர் அச்சடித்து ஒட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-நே.நவீன் குமார்,

Leave a Reply