திருச்சி சஞ்சீவி நகர் திருப்பத்தில் இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதியது!

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி காவிரி பாலம் அருகேயுள்ள சஞ்சீவி நகர் திருப்பத்தில் இன்று மாலை 4 மணியளவில் இளைஞர் ஓருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அந்த வழியாக வந்த அரசு பேருந்து ஒன்று, இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், அதிர்ஷ்டவசமாக  அந்த இளைஞர் உயிர் தப்பினார். ஆனால்,  அவரது இருசக்கர வாகனத்தின் முன்பகுதி சேதமடைந்தது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அச்சமயம் இன்று அங்கு பணியிலிருந்த பெண் போக்குவரத்து காவலர் தகவல் அளித்ததின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து பணி போலிசார் போக்குவரத்தைச் சீர்செய்தனர்.

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர் மற்றும் கொண்டையம்பேட்டை ஆகிய இரு இடங்களிலும் நான்கு திசைகளில்  இருந்தும் வாகனங்கள்  அதிவேகமாக வருவதால், இப்பகுதிகளில்  அடிக்கடி சாலை விபத்துக்கள் நடக்கின்றன. இதனால் விலைமதிக்க முடியாத மனித உயிர்கள் பலியாகின்றனர்.

மேலும், கல்லணைக்கு வரும்  சுற்றுலா  பயணிகளின் வாகனங்கள் அனைத்தும், மேற்படி சஞ்சீவி நகர் அல்லது கொண்டையம்பேட்டை ஆகிய இரு இடங்களில் வந்துதான் திருப்பவேண்டிய கட்டாயம் இருக்கிறது.

சஞ்சீவி நகர் மற்றும் கொண்டையம்பேட்டை ஆகிய இரு இடங்களிலும் போக்குவரத்து காவலர் தலா ஒருவர்தான் பணியில் இருக்கிறார்கள். பாவம்! அந்த ஒருவரால் போக்குவரத்தை கட்டுப்படுத்தவோ, சீர்படுத்தவோ முடியவில்லை. மேலும், உணவு இடைவேளை மற்றும் இயற்கை உபாதைகளை கழிக்க செல்வதற்குகூட மாற்று ஆள் இல்லாமல் அவர்கள் அவதிபடுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. 

எனவே, மேற்படி இரண்டு இடங்களிலும் மூன்றுக்கும் மேற்பட்ட காவலர்களை பணி அமர்த்தினால் மட்டும்தான் போக்குவரத்தைச் சீர்செய்ய முடியும்.

மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கொண்டையம்பேட்டை அருகே சுரங்கப் பாதை அமைக்கப்படும் என்று சொல்லி, அந்த இடத்தை மத்திய சாலை போக்குவரத்து இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், படை பரிவாரங்களோடு வந்து நேரில் பார்வையிட்டார். அவரது பதவி காலமும் முடியபோகிறது. ஆனால், இதுவரை சுரங்கப் பாதை அமைப்பதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை  என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

 

ஆளுநர் மாளிகை முன்பு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் தொடர் போராட்டம்!-அதிவிரைவுப் படையின் உதவியோடு வெளியேறிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி!
போலிஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்!-உத்தரவின் உண்மை நகல்.

Leave a Reply