குடிதண்ணீரை தடுத்ததாக கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

சேலம் மாவட்டம், ஏற்காடு ஒன்றியத்திற்குட்பட்ட, தாழ் கொளகூர் கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு வரும் தண்ணீரை, பக்கத்து கிராமத்தினர் தடுத்ததாக கூறி 250-க்கும் மேற்பட்டோர் ஏற்காடு காவல் நிலையத்தில் திரண்டனர்.

தாழ் கொளகூர் கிராமத்தில் போதிய குடிநீர் வசதி இல்லாததால், அக்கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் அருகில் உள்ள மலைப்பகுதியில் உருவாகும் ஆற்றில் இருந்து குழாய் அமைத்து மேல் கொளகூர் கிராமம் வழியாக தாழ் கொளகூர் வரை குழாய் அமைத்து, தாழ் கொளகூர் மற்றும் மேல் கொளகூர் ஆகிய இரு கிராமங்களுக்கு தண்ணீர் வழங்கி வந்துள்ளார். அவர் கொடுக்கும் தண்ணீருக்கு மக்களிடம் பணம் பெற்றும் வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வாரம், மேல் கொளகூர் கிராமத்தை சேர்ந்த குப்புசாமி என்பவரது வீட்டில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்கு அதிகளவில் தண்ணீர் தேவைப்பட்டுள்ளது. அதற்கு தண்ணீர் தர பாலமுருகன் பணம் கேட்டுள்ளார். அதற்கு குப்புசாமி மறுத்து, ஆற்றில் இருந்து வரும் தண்ணீருக்கு நான் ஏன் பணம் தர வேண்டும்? என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

குப்புசாமிக்கு ஆதரவாக மேல் கொளகூர் கிராம மக்கள் பாலமுருகன் அமைத்த குழாய்களை துண்டித்துள்ளனர். இதனால் தாழ் கொளகூர் கிராம மக்களுக்க தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் தாழ் கொளகூர் கிராம மக்கள் 250 –க்கும் மேற்பட்டோர் இது குறித்து புகார் தெரிவிக்க, ஏற்காடு காவல் நிலையத்தில் திரண்டனர்.

சமாதானம் பேச அதிகாரிகள் படகு இல்லம் அருகில் உள்ள கார் பார்க்கிங் பகுதிக்கு வர சொன்னதாக கூறி மக்களை காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். அங்கு சாலை பகுதிகளில் மக்கள் கும்பலாக காத்திருந்தனர். அங்கு வந்த ஏற்காடு காவல் ஆய்வாளர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இன்று பி.டி.ஓ. ஏற்காடு வராததால் நாளை கொளகூர் கிராமத்திற்கே வந்து சுமூக தீர்வு செய்ய உள்ளதாக கூறி கிராம மக்களை அனுப்பி வைத்தார். 1 மணி நேரத்திற்கு மேலாக கிராம மக்கள் படகு இல்ல சாலையில் திரண்டு இருந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.    

-நவீன் குமார்.

Leave a Reply