தாமதிக்கப்படும் நீதியும், ஆபத்து மற்றும் அவசரக் காலத்திற்கு வழங்கப்படாத நிதியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிம்மதியை அளிக்காது!

கஜா புயலால் காவிரி டெல்டா மாவட்டங்கள் மிகப் பெரிய சீரழிவையும், இழப்பையும் சந்தித்துள்ளது. அங்குள்ள விவசாயிகளும், விவசாய கூலித்தொழிலாளர்களும் மற்றும் மீனவர்களும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். அவர்கள் இழந்ததை யாராலும் முழுமையாக திருப்பி தர முடியாது. அவர்களின் எதிர்காலம் தற்போது கேள்விகுறியாக உள்ளது.

இந்நிலையில், கஜா புயல் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிக்காக ரூ. 15 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று, பாரத பிரதமர் நரேந்திர மோதியை நேரில் சந்தித்து தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி கோரிக்கை வைத்திருந்தார். அதன் அடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சகம் சில நாட்களுக்கு முன்னதாக ரூ.353 கோடியை தமிழகத்திற்கு வழங்கியது.

இந்நிலையில், தற்போது தேசிய பேரிடர் நிதியில் இருந்து ரூ. 1,146.12 கோடியை, மத்திய உள்துறை அமைச்சகம் ஒதுக்கியுள்ளது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையிலான உயர்மட்டக்குழு கூட்டத்தில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பிரச்சனையில் மத்திய அரசு அரசியல் ஆதாயம் தேடாமல், பாராளுமன்ற தேர்தல் அறிவிப்புவரை காத்திருக்காமல், தமிழக மக்களின் நலன் கருதி, தாராள மனதுடன் தாமதமில்லாமல் தேவையான நிதியை போர்கால அடிப்படையில் உடனடியாக முழுமையாக வழங்க வேண்டும்.

தாமதிக்கப்படும் நீதியும், ஆபத்து மற்றும் அவசரக் காலத்திற்கு வழங்கப்படாத நிதியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிம்மதியை அளிக்காது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

One Response

  1. குமார் January 1, 2019 10:29 am

Leave a Reply