காவல் நிலையங்களில் ‘காவலன் செயலி’ விழிப்புணர்வு பதாகை!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள காவலன் செயலி விழிப்புணர்வு பதாகை.

தமிழக காவல் துறையில், மாநில காவல் தலைமை கட்டுப்பாட்டு மையம் மூலமாக இயங்கக்கூடிய, காவல்துறையினரை அழைப்பதற்கான, ‘காவலன் டயல் – 100’ மற்றும் பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் அவசர பாதுகாப்புக்கான, ‘காவலன் எஸ்.ஓ.எஸ். என்ற ‘மொபைல் ஆப்’கள் உருவாக்கப்பட்டுள்ளன.

‘காவலன் டயல் – 100’ என்ற ‘மொபைல் ஆப்’பை, பொதுமக்கள் தங்கள் மொபைல் போனில், பதிவிறக்கம் செய்து கொண்டு அவசர காலத்தில் 100 என்ற எண்ணை டயல் செய்யாமல், ‘ஆப்’பை தொட்டால், நேரடியாக மாநில காவல் தலைமை கட்டுப்பாட்டு அறையை, தங்களுடைய இருப்பிடத் தகவல்களுடன் தொடர்பு கொள்ள இயலும்.

மேலும், ‘காவலன் எஸ்.ஓ.எஸ். மொபைல் ஆப்பானது, பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பிற்காக, பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ‘மொபைல் ஆப்’பை பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் தங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அவசர தேவையின் போது, மொபைல் போனை அதிரச் செய்தாலே, அவர்களுடைய இருப்பிட தகவல், மாநில கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும். இதன் மூலம் அருகாமையில் இருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விரைந்து வந்து பாதுகாப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகளை உடனே மேற்கொள்வார்கள்.

அத்துடன் மொபைல் ஆப்-யில் பதிவு செய்துள்ள மூன்று உறவினர்கள் அல்லது நண்பர்கள் எண்ணிற்கு இருப்பிட தகவலுடன் எச்சரிக்கை எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும்.

எனவே, காவலன் செயலியை உங்கள் அலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டால், பாதுகாப்பாக வலம் வரலாம், மற்றவர்களுக்கும் உதவலாம்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply