சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க தடை!-ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தனிப்பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமனம்!-சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவையும் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

ஐ.ஜி. பொன் மாணிக்கவேல்.

மேலும், நேற்று (30.11.2018) பணி ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேலை, சிலை திருட்டு தடுப்புப் பிரிவுக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Hon’ble Thiru. Justice P.D. Audikesavalu.

 

Hon’ble Thiru. Justice R. Mahadevan.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவின் முக்கிய அம்சங்கள்:

சிலை கடத்தல் வழக்குகளை விசாரணைக்கு எடுக்க சி.பி.ஐ. திட்ட வட்டமாக மறுத்து விட்டது. அதேநேரத்தில் தனிப்பிரிவுக்கு உதவுவதாக தெரிவித்துள்ளது. மத்திய அரசும் இதுவரை அமைதியாக உள்ளது. அதனால் அசாதாரண சூழ்நிலை எழுந்துள்ளது. சிலைகளையும், கோவில் சொத்துகளையும் பாதுகாக்க, இந்த நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டியுள்ளது.

ஐ.ஜி.அந்தஸ்தில் உள்ள அதிகாரி பொன் மாணிக்கவேல், இன்றுடன் (30.11.2018) பணி ஓய்வு பெறுகிறார். அவர் நியாயமான, பாரபட்சமற்ற அதிகாரி என்பது அவரது செயல்பாடுகளில் இருந்து தெரிகிறது. வழக்கில் தொடர்புடையவர்களை பிடிப்பதில் அவர் பின்பற்றிய நடைமுறையில் இந்த நீதிமன்றம் திருப்தி அடைகிறது.

சமீபத்தில் நம்பத்தகுந்த தகவல் கிடைத்ததன் அடிப்படையில், 250 சிலைகளுக்கும் மேல் அவர் கண்டுபிடித்துள்ளார். கிடைக்கும் தகவல்களை ரகசியமாக வைத்து வழக்கில் பிரமாண்டமான முன்னேற்றத்தை காட்டி உள்ளார்.

சிலை திருட்டு வழக்குகளில் குற்றவாளிகள் இயங்கும் முறை பற்றிய தெளிவு, புலனாய்வு பிரிவுக்கு இருக்க வேண்டும். அதிகாரி பொன் மாணிக்கவேல் மற்றும் அவரது குழுவினர் எந்தவித பயமும், பாரபட்சமும், சார்பும் இன்றி புலனாய்வு நடத்திய விதத்தை பார்க்கும் போது, அவர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது.

எனவே, பணி ஓய்வு பெறும் பொன் மாணிக்கவேல், தொடர்ச்சியான மற்றும் முறையான விசாரணை நடத்துவதற்காக தனிப்பிரிவுக்கு தொடர்ந்து தலைமை வகித்து, சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்படுகிறது.

சிலை திருட்டு வழக்குகளை கையாள சிலை தடுப்பு பிரிவுக்கு தலைமை ஏற்க ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக ஓராண்டுக்கு நியமிக்கப்படுகிறார். பணி ஓய்வுக்கு பின் உடனடியாக இந்த பொறுப்பை அவர் ஏற்க வேண்டும்.

ஏற்கனவே உள்ள முகாமில் அதே வசதிகளுடன் அவர் செயல்படலாம். இதற்கான உத்தரவை அரசு பிறப்பிக்க வேண்டும். உத்தரவு பிறப்பிப்பதில் அரசு தாமதம் செய்தாலும் வழக்குகளை விசாரித்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு உள்ளது.

தனிப்பிரிவில் உள்ளவர்கள் அதிலேயே நீடிக்க வேண்டும். பொன் மாணிக்கவேல் கேட்கும் போலீசாரை அரசு வழங்க வேண்டும். ஓய்வு பெறும் போது பெற்ற சம்பளம் மற்றும்   இதர
பணபலன்களை சிறப்பு அதிகாரியாக நீடிக்கும் வரை தர வேண்டும்.

வழக்குகளை விசாரித்து அவ்வப்போது உரிய நீதிமன்றத்தில் சிறப்பு அதிகாரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். புலன் விசாரணையை கண்காணிக்கும் விதத்தில் இந்த நீதிமன்றத்திலும் சீலிட்ட உறையில் அறிக்கை அளிக்க வேண்டும்.

நிலுவையில் உள்ள வழக்குகளை மட்டுமின்றி, அவரது பதவி காலம் அல்லது நீதிமன்ற உத்தரவு வரும் வரை, எதிர்காலத்தில் வரும் வழக்குகளையும் புலனாய்வு செய்ய வேண்டும். சிறப்பு அதிகாரி மற்றும் அவரது குழுவுக்கு, சி.பி.ஐ. மற்றும் மத்திய அரசின் ஏஜன்சிகள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்.

நீதிமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் சிறப்பு அதிகாரி அவரது குழுவினருக்கு எதிராக எந்த விசாரணை நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. தேவையான நடவடிக்கை எடுக்க ஆதாரங்கள் இருந்தால் மேற்கொண்டு உத்தரவுக்காக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஒத்துழைப்பு அளிக்கவும், தேவையான விபரங்களை அளிக்கவும், அறநிலையத்துறை உள்ளிட்ட துறைகளுக்கு அரசு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

இந்த உத்தரவுகள் அனைத்தையும் தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும். நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

 

Leave a Reply