கம்யூட்டர், இன்டர்நெட், மின் இணைப்பு வசதிக் கேட்டு தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்!

கம்யூட்டர், இன்டர்நெட், மின் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகளை உடனே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைப்பெற்றது.

அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க தலைவர் அந்தோணிதுரை தலைமை வகித்தார்.

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்:

கணினி இன்டர்நெட், மின் இணைப்பு இல்லாத காரணத்தினால் அடங்கள் பதிவேற்றம் செய்யும் பணி செய்ய முடியாது; அதனால் பணியை புறக்கணிக்க வேண்டும்.

பழைய லேப் டாப்பில் தற்போது உள்ள பணிகளை செய்ய இயலாது; அதனால் புதிய லேப்டாப் வழங்கவேண்டும்.

கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராமங்களுக்கு வழங்கப்படும் 20 சதவீத கூடுதல் ஊதியத்தை நிறுத்தியதை கண்டிப்பதோடு, அதனை உடனடியாக வழங்கவேண்டும்.

காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்; இல்லை என்றால், கூடுதல் பொறுப்பு கணக்குகளை வட்டாட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணிமாறுதல் மாவட்ட மாறுதலாக வழங்க வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply