திருச்சி தேசிய கல்லூரி விமானப் படை என்.சி.சி. மாணவர்கள் சாதனை.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 2018ம் ஆண்டிற்கான தேசிய அளவிலான வாயுசானிக்  போட்டி அக்டோபர் 24 முதல் நவம்பர் 4 வரை AIVSC  கேம்பில் நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்ட திருச்சி தேசிய கல்லூரி விமானப் படை என்.சி.சி. மாணவர்கள் இருவர் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

இண்டியா வாயுசானிக் கேம்பில் கலந்து கொள்வது என்பது தேசிய மாணவர்படை, வான்படை மாணவர்களின் மூன்றாண்டுகாலப் பயிற்சிக்காலத்தில் மிகுந்த பெருமைக்குரிய நிகழ்வாகும். இந்தியா முழுவதும் இருந்து மிகச் சிறந்த மாணவர்கள் மட்டுமே தெரிவு செய்யப்படுவர்.

பல்திறன் சோதனைகளுக்குப் பிறகு அவர்களுள் சிறந்தவர்களாகத் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மட்டுமே இப்பயிற்சி முகாமில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.  இதில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களின் 17- என்.சி.சி இயக்குநரகங்களைச் சேர்ந்த 700 தேசிய மாணவர் படை, வான்படை, மாணவர்கள் பங்கேற்றனர். இப்பயிற்சி முகாமில், மாணவரின் திறன்களை அளவிடும் வகையில், உடற்திறன், மைக்ரோலைட் ஃபிளையிங் எனப்படும் இலகுரக விமானங்களில் பறத்தல், ஸ்கிட் ஷுட்டிங் எனப்படும் வானில் பறக்கின்ற பொருளைத் துப்பாக்கியால் சுடுதல், விமான மாதிரிகளை உருவாக்குதல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

                இரண்டாம் ஆண்டு ஆங்கில இலக்கிய பயிலும் ச.ராஜசேகர் விமான மாதிரி உருவாக்கும் போட்டியில் தங்கப்பதக்கமும், இரண்டாம் ஆண்டு இயற்பியல் பயிலும் சு.ஸ்டெஃபி சுகி துப்பாக்கி சுடும் போட்டியில்  (AIVSC)  ‘All India Vayu Sainik Camp’ பதக்கமும் வென்று தங்களது கல்லூரிக்கும் மாநிலத்திற்கும் பெருமை தேடி தந்துள்ளனர்.

      பதக்கங்களை குவித்து சாதனை படைத்த அவர்கள் இருவரையும் கல்லூரி செயலர் திரு.கே.ரகுநாதன் அவர்களும், கல்லூரி முதல்வர் டாக்டர்.ஆர்.சுந்தரராமன் அவர்களும் பாராட்டினர்.

– கே.பி.சுகுமார்.

Leave a Reply