மேல்புவனகிரி அருகே கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்..!

கடலூர் மாவட்டம், மேல்புவனகிரி ஒன்றியம், வடகிருஷ்ணாபுரம் கிராமத்தில், சுதந்திரத் தினத்தை முன்னிட்டு, “கிராம சபை கூட்டம்” இன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் அந்த ஊராட்சியை சேர்ந்த ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள்  கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்ற ஊர் பொதுமக்கள், வடகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் நடைப்பெற்று வரும் பணிகள் குறித்து, பல்வேறு சந்தேகங்களை கேட்டனர்.

இதற்கு வடகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர் கருணாமூர்த்தி எந்த பதிலும், விளக்கமும் அளிக்கவில்லை. உயர் அதிகாரிகள் யாரும் இந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்கவும் இல்லை.

இந்நிலையில், ஊர் பொது மக்களிடம் வருகை பதிவேட்டில் கையொப்பம் போடும்படி ஊராட்சி செயலாளர் கருணாமூர்த்தி கேட்டதால், வெறுப்படைந்த ஊர் பொதுமக்கள், கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினார்கள்.

இதுபோன்ற பிரச்சனைகள் இங்கு மட்டுமல்ல; இந்தியாவில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில ஊராட்சிகளை தவிர, மற்ற எல்லா கிராமங்களிலும் இதுதான் நிலமை.

“கிராமங்கள்தான் இந்தியாவின் முதுகெலும்பு” என்று மகாத்மா காந்தி சொன்னார். ஆனால், சுதந்திரமடைந்து 72 ஆண்டுகள் ஆகியும், அவருடைய கனவு இன்று வரை நிறைவேறவில்லை.

சுதந்திரம் இரவில் வாங்கியதாலோ என்னவோ இன்றுவரை விடியாமலையே இருக்கிறது.

மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் வாங்கும் அரசு அதிகாரிகள் திருந்தாதவரை, எந்த ஆட்சி வந்தாலும், இதுப்போன்ற அலங்கோலங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

-அகிலன் மணி.

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!- மத்திய நீர்வள ஆணையம் அறிவிப்பு
இந்தியாவின் 72-வது சுதந்திர தின விழா!- நாடு முழுவதும் கொண்டாட்டம்.

Leave a Reply