சுதந்திரம் என்பது வெறும் வார்த்தையல்ல! -அது நாம் வாழும் முறை…!

 

டாக்டர்.துரைபெஞ்சமின்., EDITOR & PUBLISHER.

சுதந்திரம் என்பது வெறும் வார்த்தையல்ல! –அது நாம் வாழும் முறை…!

சுதந்திரம் என்பது தறிக்கெட்டு ஓடும் காட்டாற்று வெள்ளமல்ல..!

நூலின் தொடர்பை முற்றாக அறுத்துக் கொண்டு திக்கு தெரியாமல் சுற்றித் திரியும் காகித பட்டமும் அல்ல!

தாய் கோழியின் சிறகுகள் கொடிய சிறையென்று நினைத்து கொடிய பருந்துகளின் பார்வையில் சிக்கிக் கொள்ளும் குஞ்சுகளைப் போல, வஞ்சகர்களின் வசிய வார்த்தைகளை நம்பி நம் சுதந்திரத்தை இழந்து நிற்கின்றோம்..!

செல்லும் இடமெல்லாம் செழிப்பை உருவாக்கி, பாலைவனத்தையும் சோலைவனமாக்கி, வற்றாத ஜீவ நதியாய் வளம் வர வேண்டிய நாம், கர்நாடகாகாரனிடம் சிக்கி தவிக்கும் காவிரியைப் போல, நம் சுயத்தையும், சுதந்திரத்தை இழந்து தவிக்கின்றோம்..!

அறிவாளிகளின் அரங்கம், அமுதூறும் சுரங்கம், புளிக்காத தமிழ் பால், பொற்றாமரை குளமாய் பூத்து குலுங்க வேண்டிய நம் மனதெல்லாம், இன்று போராட்டக் களமாக மாறிப்போய் இருக்கிறது..!

இதற்கு உண்மையான காரணம் என்ன?அறியாமையா? அடிமைத்தனமா?

உரிமை என்பது கேட்டு பெறுவது அல்ல!-மாறாக, எடுத்துக் கொள்வது என்ற உண்மையை என்றைக்கு நம் உதிரத்தில் உணர்கின்றோமோ!  அன்று தான் நமக்கெல்லாம் உண்மையான சுதந்திரம்.

ஒரு ஜீவனை துன்புறுத்தி மற்றொரு ஜீவன் சந்தோஷம் அடைவது சாடிசம்!

தன்னை தானே துன்புறுத்திக் கொண்டு இன்பம் காண்பது மசோகிசம்!

சாடிசம் என்பது ஆணவத்தின் உச்சக்கட்டம்…!

மசோகிசம் என்பது அடிமையின் அடையாளம்..!- கிட்டத்தட்ட இரண்டுமே சுயநலத்தின் வெளிப்பாடு! இதுதான் சுதந்திரத்திற்கான இடர்பாடு.

சாடிசத்தால் மதிப்பை இழந்தவர்களும், மரணத்தை அடைந்தவர்களும் இங்கு ஏராளம்..!

மசோகிசத்தால் களங்கப்பட்டவர்களும்,
காயம்பட்டவர்களும் இங்கு தாராளம்…!

இதுதான் அடிமை தேசங்களின் அடையாளம்..!

சாடிசம், மசோகிசம் இவை இரண்டுமே குணப்படுத்த முடியாத கொடிய மனநோய்..!

இதுப்போன்ற நபர்கள் இல்லாத இடமுமில்லை; இவர்கள் செல்லாத வழியுமில்லை..! 

இவர்களை திருத்த முயன்றவர்கள் திரும்பி வந்ததாக வரலாறும் இல்லை.

வேறு என்ன செய்வது? இவர்களை வேடிக்கைப் பார்ப்பதா? (அல்லது) இவர்களிடமிருந்து விலகி நிற்பதா?

இவை இரண்டையுமே நீங்கள் செய்ய வேண்டாம்!- வேறு வழியில் பயணப்படுங்கள்…!

இவர்களையெல்லாம் காலம் பார்த்து கொள்ளு(ல்லு)ம்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply