த(க)ண்ணீரில் தத்தளிக்கும் கேரளா!

தென்மேற்கு பருவ மழையின் காரணமாக கேரளாவில் தொடர்ந்து பல நாட்களாக மழை பெய்து வருகிறது. ஆனால், கடந்த இரண்டு மூன்று நாட்களாக இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் அணைகள் அனைத்திலும் நீர் நிரம்பத் தொடங்கிவிட்டன. மேலும், கேரள மாநில வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் சுமார் 27 அணைகளிலும் நீர் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த மழையால் இடுக்கி, அலாப்புழா, வயநாடு, எர்ணாக்குளம் மற்றும் கோழிக்கோடு பகுதிகள் பெருத்த சேதம் அடைந்துள்ளன.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவுடன் இணைந்து, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நேரில் சென்று பார்வையிட்டார்.

கேரள முதல்வரும், கேரள எதிர்க்கட்சித் தலைவரும் ஒன்றாக இணைந்து வெள்ளச் சேதங்களை பார்வையிட்டது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலை தந்துள்ளது. இது முன்மாதிரியான நடவடிக்கையாகவும்  பார்க்கப்படுகிறது.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இராணுவம், கப்பற்படை, விமானப்படை, தீ அணைப்புத்துறை, காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

-எஸ்.சதிஸ் சர்மா, -எம்.ஆப்ரகாம்.

Leave a Reply