முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் நலமாக இருக்கிறார்!-ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தகவல்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை வாயிலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள், உடல்நலக்குறைவால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தி, எனக்கு நேற்று நண்பகலில் தெரிந்தது.

எனவே, இன்று அதிகாலை வானூர்தியில் புறப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்தேன். வாஜ்பாய் அவர்களின் செயலர் ஜிங்டா, மருத்துவமனை வாயிலில் இருந்து, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றார். வாஜ்பாய் அவர்கள் சிகிச்சை பெறும் அறைக்குள் இருந்த அவரது வளர்ப்பு மகள் நமீதா, நான் வந்த செய்தியைக் கேட்டு வந்தார்கள். அவரிடம் கவலையோடு விசாரித்தேன்.

அதற்கு அவர், ‘மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது; சிறுநீர் கழிக்கும் பாதையிலும் இடையூறு ஏற்பட்டது; எனவே, முன் எச்சரிக்கையாக மருத்துவமனைக்குக் கொண்டு வந்தோம். கவலைப்படத் தேவை இல்லை என்று மருத்துவர்கள் கூறி இருக்கின்றார்கள் என்றார்.

‘என்னைத் தன் வளர்ப்பு மகன் என்று பிகாரில் சொன்னதை நான் நினைவூட்டியபோது, ‘ஆமாம் அவர் உங்களைத் தன் மகன் போலத்தான் கருதினார். நீங்களும் தில்லிக்கு வரும்போதெல்லாமல் தவறாமல் வீட்டுக்கு வந்து போய்கொண்டு இருக்கின்றீர்களே என்றார்.

வாஜ்பாய் அவர்களுக்கு 2008 ஆம் ஆண்டு பக்கவாதத் தாக்குதல் வந்தது. கடந்த 11 ஆண்டுகளாக அவருக்கு ஆண்டுக்கு மூன்று நான்கு முறை தில்லிக்கு வந்து, அவரது இல்லம் சென்று படுக்கைக்கு அருகில் நின்று, அவரது நலம் வேண்டி இயற்கை அன்னையைப் பிரார்த்தனை செய்து, அவரது கால்களைத் தொட்டு வணங்கி விட்டு, வளர்ப்பு மகள் நமீதா, மருமகன் ரஞ்சன் பட்டாச்சார்யா ஆகியோரோடு அமர்ந்து பேசிவிட்டுத் திரும்புவது வழக்கம். முதல் இரண்டு ஆண்டுகள் நான் வந்து பார்த்தபோதெலலாம் பேசிக்கொண்டுதான் இருந்தார்.

அதற்கு முன்பு, 1986 ஆம் ஆண்டு அவருக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு, இதே எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தி, அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரியாது. ஆனால், எனக்குத் தகவல் கிடைத்ததால் அவரைப் பார்க்கத் தனியாக வந்து அவரோடு அமர்ந்து அரை மணி நேரம் பேசினேன். மனம் நெகிழ்ந்து போனார். பின்னாளில் அதைப் பற்றிப் பலமுறை என்னிடம் சொல்லி இருக்கின்றார்.

வாஜ்பாய் அவர்களை, அவருடைய உயிர் நண்பரான ஷிவ்குமார் அவர்களுடன், 1979-ல் மோதி மகால் ஓட்டலில் சந்தித்தேன். வாஜ்பாய் அவர்களுக்கு மெய்க்காப்பாளராகவும் இருந்து வருகின்ற ஷிவ்குமார் அவர்களையும் இன்று சந்தித்தேன். அவர் என்னை ஆரத் தழுவிக் கொண்டார். ‘தலைவர் வாஜ்பாய் அவர்கள் மீது உயிரான அன்பு கொண்டவர் நீங்கள்; அதைப்போல அவரும் உங்களை நேசிக்கின்றவர்’ என்று உணர்ச்சிவயப்பட்டுச் சொன்னார்.

அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் மதச்சார்பு இன்மையைக் கட்டிக் காத்தார். எதிர்க்கட்சிகளை மதித்து ஜனநாயகத்தைப் பாதுகாத்தார். என் வேண்டுகோளை ஏற்று நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தைத் தனியார்மயமாக்கும் முடிவை மாற்றிக்கொண்டார். ஈழத்தமிழர்களுக்கு அவரும், ஜார்ஜ் பெர்னாண்டசும் செய்த உதவிகளை நான் என்றைக்கும் மறக்க முடியாது.

அவர் முழுமையான நலம் பெற வேண்டும் என்ற என் விருப்பத்தை, சகோதரி நமீதா அவர்களிடம் தெரிவித்தேன் என்று, வைகோ செய்தியாளர்களிடம் கூறினார்.

-எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply