பெற்ற மகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ஆர். எஸ். எஸ். பயிற்சி முகாம் நிறைவு விழாவில் கலந்துக்கொண்ட பிரணாப் முகர்ஜி!

மராட்டிய மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழாவில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் இந்திய குடியரசு தலைவருமான பிரணாப் முகர்ஜி தலைமை விருந்தினராக இன்று கலந்துக்கொண்டார்.

ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி கண்டிப்பாக கலந்துக்கொள்ளக்கூடாது என்று காங்கரஸ் கட்சியின் தலைமை ஏற்கனவே எச்சரித்து இருந்தது. அதே போல் பிரணாப் முகர்ஜியின் மகளும், காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளருமான சர்மிஸ்தா முகர்ஜி தன் தந்தை பிரணாப் முகர்ஜிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

அத்தனை எதிர்ப்புகளையும் மீறி பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றியது, இந்திய அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பார்வையில் தேசம், தேசியவாதம் மற்றும் தேசபக்தி ஆகியவற்றின் கருத்தாக்கங்கள் தொடர்பாக என்னுடைய புரிதல்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்வதற்காக நான் இங்கு வந்து உள்ளேன். ஒரு தேசம் என்பது பெருவாரியான மக்கள் ஒரே மொழி, பாரம்பரியத்தை பகிர்ந்து கொள்ளுவது.

தேசியவாதம் என்பது ஒருவருடைய தேசம் என்னவென்பதை வெளிப்படுத்துகிறது.

தேசபக்தி என்பது தாய்நாட்டின் மீது கொண்ட பக்தியென வரையறுக்கப்படுகிறது.

ஆனால், நம்முடைய சகிப்புத்தன்மையில் இருந்து நம்முடைய வலிமை உருவாகிறது.

நம்முடைய பன்முகத்தன்மைக்கு மதிப்பளிக்க வேண்டும், கொண்டாடவேண்டும்.

நம்முடைய தேசத்தின் அடையாளம் என்பது நீண்ட வரலாறு கொண்டது, பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் நம்பிக்கைகள் நம்மை தலைச் சிறந்தவர்களாக்கி உள்ளது, சகிப்புத்தன்மையை உருவாக்கி உள்ளது. சகிப்புத்தன்மையின்மை மட்டுமே நம்முடைய தேசிய அடையாளத்தை நீர்க்கச்செய்யும்.

நம்முடைய தேசம் என்பதை மதம், மரபியல் அல்லது சகிப்புத்தன்மையின்மை என்பதன் மூலம் வரையறை செய்ய முயற்சி செய்தால், நம்முடைய அடையாளத்தை சீரழிக்கும்.

நம்முடைய தேசியவாதத்தை காந்திஜி பிரத்தியேகமானது அல்லது ஆக்கிரோஷமானது அல்லது அழிக்கக்கூடியது அல்ல என விளக்கி உள்ளார். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவர்ஹலால் நேருவும் தேசியவாதம் என்ன என்பதை அவருடைய புத்தமான டிஸ்கவரி ஆப் இந்தியாவில் தெளிவாக விளக்கி உள்ளார்.

இந்தியாவில் இந்து, இஸ்லாமியம், சீக்கியம் மற்றும் பிற குழுக்களின் கருத்தியல் இணைப்பு என்பதில்தான் தேசியவாதம் வெளிப்படும் என்பதே என்னுடைய நம்பிக்கையாகும்.

ஜனநாயகம் என்பது நம்முடைய மிகவும் பொக்கிஷமான வழிக்காட்டியாகி உல்ளது. ஜனநாயகம் என்பது ஒரு பரிசு கிடையாது, புனிதமான வழிக்காட்டியாகும். இந்தியாவை சர்தார் படேல் ஒருங்கிணைத்தார், ஒற்றுமைபடுத்தினார். ஒவ்வொரு நாளும் நம்மை சுற்றிலும் வன்முறையானது அதிகரித்துவிட்டது என்பதை பார்க்கிறோம். வன்முறை என்பது இருளின் வடிவமாகும். நம்முடைய தாய்நாடு அமைதி, இணக்கம் மற்றும் மகிழ்ச்சியை கேட்கிறது.

இவ்வாறு முன்னாள் இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் பேசினார்.

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (Rashtriya Swayamsevak Sangh-RSS) இந்தியாவில் இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட வலதுசாரி இந்து அமைப்பு “ஆர்.எஸ்.எஸ்-RSS” என அழைக்கப்படுகின்றது. இது 1925 செப்டம்பர் 27ம் தேதி விஜயதாசமி அன்று கேசவ பலிராம் ஹெட்கேவர் என்பவரால் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

பழுதடைந்த 100 ஆண்டுகள் பழமையான கட்டிடம்! பயத்தில் நடமாடும் பொதுமக்கள்!-திருச்சி மாநகராட்சி நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா?
வெளிநாட்டிலிருந்து மணல் இறக்குமதி செய்து பொதுமக்களுக்கு தேவையான மணல் வழங்குவதற்கு அரசு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறது!-தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி தகவல்.

Leave a Reply