திருச்சி மத்திய பேரூந்து நிலையம் அருகே இரவு நேரத்தில் வெடித்த குடிநீர் குழாய்! -பாதுகாப்பு நடவடிக்கைக்கு உதவிய நமது “உள்ளாட்சித்தகவல்” ஊடக நிர்வாகம்.

திருச்சி மத்திய பேரூந்து நிலையம் அருகே, திண்டுக்கல் சாலையில் வி.எஸ்.டி மோட்டார் கம்பெனி எதிரில் நேற்று இரவு 10.20 மணியளவில் குடிநீர் குழாய் வெடித்து சேதமடைந்ததால், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த நாம், உடனடியாக திருச்சி மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தின் அலைபேசி மற்றும் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டோம். ரிங் போனதே தவிர, ஆனால் யாரும் போனை எடுக்கவில்லை.

அதற்குள் தண்ணீரின் பெரும் பகுதி வி.எஸ்.டி மோட்டார் கம்பெனிக்குள் புகுந்தது. அவசர போலிஸ் 100-என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டோம். சம்பவம் நடந்த இடம் திருச்சி என்று தெளிவாக குறிப்பிட்டும் கூட, சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு இணைப்பை கொடுத்தனர். அப்போது இணைப்பில் இருந்த அதிகாரி, மெட்ரோ நிறுவனத்திற்கு பேசும்படி கூறினார். நாங்கள் திருச்சியில் இருந்து பேசுகிறோம். எனவே, திருச்சியில் உள்ள தொடர்பு எண்ணை வழங்கும்படி கேட்டோம். அதெல்லாம் கிடையாது, ஆபீஸ்ல வந்து லெட்டர் எழுதிக்கொடுங்க என்று இணைப்பை துண்டித்தார், மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அந்த பொறுப்பான அதிகாரி.

அதன் பிறகு மறுபடியும் அவசர போலிஸ் 100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டோம். மகராசி பெண் ஒருவர் இணைப்பில் வந்தார். மேற்படி நடந்த விபரத்தையெல்லாம் மிக சுருக்கமாக தெரிவித்தோம். நிலைமையை புரிந்துக் கொண்ட அவர், அந்த பகுதி எந்த காவல்நிலைய எல்லைக்குள் வருகிறது என்று கேட்டார். திருச்சி கண்டோண்மெண்ட் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்டது என்று தெரிவித்தோம். அவர் முறையாக தகவல் தெரிவித்ததின் அடிப்படையில், திருச்சி மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து சேர்ந்தனர். 

இதற்கிடையில் அந்த வழியாக வரும் மனிதர்கள், இருசக்கர மற்றும் இலகு ரக, கன ரக வாகனங்கள், அந்த குடிநீர் குழாய் வெடித்த பள்ளத்திற்குள் விழுந்து விடக் கூடாது என்பதற்காக, அந்த வழியாக வந்த இரண்டு இளைஞர்களின் உதவியுடன், மரச்செடிகள் மற்றும் சிகப்பு நிற துணி ஒன்றையும் தேடிப்பிடித்து கொடியாக நட்டு வைத்து, மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வரும்வரை அரணாக அந்த இடத்தை காத்து நின்றனர்.

அந்த பெயர் தெரியாத இளைஞர்களுக்கு நமது வாழ்த்துக்களையும், வணக்கத்தையும் தெரிவித்து விட்டு, அதன் பிறகு அங்கிருந்து நாம் மனநிறைவோடு புறப்பட்டோம்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

Leave a Reply