ஏமாற்றம் அடைந்த எடியூரப்பா, அவமானத்தை சந்திக்க விரும்பாமல், நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாக தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்!

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சிகளின் ஆட்சி அமைக்கும் கோரிக்கையை நிராகரித்து விட்டு, எடியூரப்பா தலைமையிலான பாஜக கட்சிக்கு அம்மாநில ஆளுநர் வாஜூபாய் வாலா ஆட்சி அமைக்கும் உரிமையை முதலில் வழங்கினார்.

அதன்படி எடியூரப்பாவுக்கு முதலமைச்சராக பதவி பிரமாணமும் செய்து வைத்தார். பெரும்பான்மையை நிரூப்பிக்க எடியூரப்பாவுக்கு 15 நாட்கள் அவகாசமும்  ஆளுநர் வழங்கினார்.

இந்நிலையில், கர்நாடகா ஆளுநர் வாஜூபாய் வாலாவின் தன்னிச்சையான இந்த முடிவை எதிர்த்து, காங்கிரஸ் கட்சிச் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க உத்தரவிட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள்,

சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்று (19.05.2018) 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

மூத்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை சபாநாயகராக நியமித்து நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்த வேண்டும்.

ரகசிய வாக்கெடுப்பு கூடாது; வெளிப்படையாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அச்சமின்றி வாக்களிக்க போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும் வரை நியமன சட்டமன்ற உறுப்பினரை நியமிக்க கூடாது.

வாக்கெடுப்பு முடியும் வரை எடியூரப்பா எந்த கொள்கை முடிவையும் எடுக்கக்கூடாது.

சட்டமன்ற உறுப்பினர்கள் கைகளை உயர்த்தி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தலாம்.

இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர்களை தனக்கு ஆதரவு அளிக்க வலியுறுத்தி எடியூரப்பா பேரம் பேசியதாக தகவல் வெளியானது. பெரும்பான்மையை நிரூபிக்க போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாததால், மேலும் அவமானத்தை சந்திக்க விரும்பாத எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாக தனது முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply