வறண்டு கிடக்கும் வைகை ஆறு..! தூய்மையை காக்க வேண்டும் என்ற அறிவிப்பு பலகை இங்கே இருக்கு!-ஆனால், தூய்மை எங்கே இருக்கு?

வைகை ஆறு மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள பெரியாறு பீடபூமியில் தோன்றி, வடகிழக்காகப் பாய்ந்து, வடக்கே பழனி குன்றுகளாலும், தெற்கே வருசநாடு குன்றுகளாலும் அரண் செய்யப்பட்டுள்ள கம்பம் பள்ளத்தாக்கை அடைகிறது.

பின்னர் வருசநாடு குன்றுகளின் கிழக்கு மூலையை அடைந்ததும், தென்கிழக்காகத் திரும்பி, மதுரை மாநகர் வழியாகப் பாய்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் வங்காள விரிகுடாவின் பாக்கு நீரிணையில் கலக்கிறது.

வைகை ஆற்றின் நீளம் 258 கிலோ மீட்டர், இவற்றின் பாசனப் பரப்பு 7031 சதுர கிலோ மீட்டர் ஆகும். பொதுவாக மழைக்காலத்தில் குறிப்பாக வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் மட்டும் வைகை ஆற்றில் நீர்ப்பெருக்கு ஏற்படும். பிற காலங்களில் பொதுவாக வைகை வறண்டே காணப்படும். இதன் வறட்சிக்கு முக்கிய காரணம், வெள்ளி மலையில் ஏற்படுத்தப்பட்ட அணையும், அதிலிருந்து நீர் மேற்காக கேரள எல்லையை நோக்கி திருப்பப்பட்டு பெரியாறு நீர் தேக்கத்தில் (தேக்கடி) தேக்கப்படுவதால், மழைக்காலங்கள் தவிர, பிற காலங்களில் தண்ணீர் வரத்து வராதபடி செயற்கையாக வறட்சி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

வைகை ஆற்றுப் படுகை 9º 15’ மற்றும் 10º 20’ வடக்கு அட்ச ரேகைக்கு இடையிலும், 77º 10’ மற்றும் 79º 05’ கிழக்கு தீர்க்க ரேகைக்கு இடையிலும் அமைந்துள்ளது. மேலும், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் என மொத்தம் 7031 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது.

பெரியாறு அணை, வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை, மருதநதி அணை, சாத்தையாறு அணை ஆகியவை இந்தப்படுகையில் உள்ள அணைகளாகும்.

சுருளியாறு, தேனியாறு, வரட்டாறு, வராகநதி, மஞ்சளாறு, நாகலாறு, மருதநதி, சிறுமலையாறு, சாத்தையாறு முதலியவை வைகையின் துணை ஆறுகளாகும்.

பழனி மலையில் உற்பத்தியாகும் வராகநதி, கொடைக்கானல் மலையிலிருந்து வரும் பாம்பாற்றுடன் இணைந்து தேனிக்குக் கிழக்கே, குன்னூருக்குத் தெற்கில் வைகையுடன் கலக்கிறது. பின்னர், முல்லையாராக பயணித்து, இவ்வாறு பயணிக்கும் பொழுது சுருளியாறு இதனுடன் கலக்கிறது, பின்னர் வள்ளல் நதி என்று சொல்லப்படும் வருசநாட்டு பள்ளத்தாக்கிலிருந்து உருவாகும் வள்ளல் நதியுடன் கலந்து வைகை ஆறாக வைகை அணையை வந்தடைகிறது.

மேலும், கொடைக்கானல் மலையிலிருந்து உருவாகும் ஆறுகளும், பெரியகுளம் வழியாக சென்று வைகை அணை முன்பு இந்த ஆற்றில் கலக்கிறது. அவ்வாறு கலக்கும் ஆறுகளில் மஞ்சளாறு, வராக நதி குறிப்பிடத்தக்கது ஆகும்.

ஆண்டுதோறும் மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் “வைகை ஆற்றில் இறங்கும்’ நிகழ்வை பல்லாயிரக் கணக்கானோர் பக்தி பரவசத்துடன் கண்டு களிக்கின்றனர்.

இப்படி வரலாற்று சிறப்பும், ஆன்மீகத்தின் அடையாளமாகவும் திகழும் வைகை ஆறு, இன்று தூய்மை இழந்து, தூற்வாரப்படாமல், குப்பை தொட்டியாகவும், கழிவு நீர் குட்டையாகவும் மாசு அடைந்து காணப்படுகிறது.

வைகை ஆற்றின் ஆரம்பம் முதல் இறுதிவரை அனைத்து நகரங்களின் கழிவு நீரும் இந்த ஆற்றுடன் கலக்கும் படியான கழிவு நீர் வடிகால்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதுவே இந்த ஆற்றின் மாசுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

இந்த லட்சணத்தில் “வைகை ஆற்றை சுத்தமாகப் பாதுகாப்போம்; வைகை ஆற்றுக்குள் குப்பை கொட்டக் கூடாது” என்று மதுரை மாநகராட்சி சார்பில் பல இடங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், மதுரை மாநகராட்சியின் கழிவுகள் மற்றும் கழிவு நீர்கள் அனைத்தும் வைகை ஆற்றுக்குள்தான் வந்தடைகிறது. இதுதான் தூய்மை இந்தியாவின் லட்சணமா? சர்க்கரை என்று ஏழுதி நக்கினால் இனிக்குமா? இதற்கு மதுரை மாநகராட்சி நிர்வாகம் என்ன பதில் சொல்லப்போகிறது?

இந்நிலையில், வைகை ஆற்றில் மணல் கொள்ளை நிலத்தடி நீரை இல்லாமல் செய்து உள்ளது. இதனால் நூற்றுக்கணக்க்கான விவசாய நிலங்கள் பாழ்பட்டு உள்ளன. மணல் இருந்த வரை ஆற்றின் மணல் வழியே பயணித்துக் கொண்டு இருந்த ஆற்று நீர், மணல் இல்லாமல் வெறும் கற்களிலும், பாறைகளிலும் பயணிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.

மேலும், வைகை ஆற்றை ஆக்கிரமித்து பல நகரங்களில் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. உச்சபட்சமாக, சிவகங்கை மாவட்டம், நெல்முடிகரை என்ற கிராமத்தில், வைகை ஆற்றின் சுமார் 7 ஏக்கர் பகுதியை 1979-ஆம் ஆண்டு தனியார் ஒருவருக்கு அதிகாரிகள் பட்டா போட்டு கொடுத்திருக்கிறார்கள். வைகை ஆற்று நிலம் தற்போது வீட்டுமனைகளாக மாறியுள்ளது. இதை விடக் கேவலம் வேறு என்ன இருக்க முடியும்?

எனவே, தமிழக அரசு வைகை ஆற்றில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை போர்கால அடிப்படையில் அகற்றி, வைகை ஆற்றை தூற்வாரி தூய்மைப்படுத்த வேண்டும்.

செய்வார்களா? பொறுத்திருந்துப் பார்ப்போம்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

படங்கள் : கே.பி.சுகுமார்.

 

 

 

Leave a Reply