திருச்சியில் உருக்குலைந்து காணப்படும் உய்யகொண்டான் ஆறு!

உருக்குலைந்து காணப்படும் உய்யகொண்டான் ஆறு.

தென்னகத்தின் மத்தியில் திருச்சி மாவட்டம் அமைந்துள்ள காரணத்தால், தென்னகத்தின் மீது படையெடுத்து வெற்றி கொண்ட அத்தனைப் பேரரசுகளின் ஆதிக்கத்திலும் பரந்தும், குறுகியும் இம்மாவட்டம் விளங்கியது.

சேர, சோழ, பாண்டியர், முத்தரையர், விஜய நகரப் பேரரசாலும், பாளையக்காரர்களாலும் திருச்சி மாவட்டம் ஆளப்பட்டது.

ஆங்கிலேயர்களின் நிலையான ஆட்சி அமைந்த பிறகே, இம்மாவட்டத்தில் அமைதியும், வளர்ச்சியும் ஏற்படத் தொடங்கின.

1948-ல் புதுக்கோட்டை சமஸ்தானம் திருச்சி மாவட்டத்தில் இருந்தது. இப்பகுதி 1974-ல் திருச்சியிலிருந்து பிரிக்கப்பட்டு, தனி மாவட்டமாக அமைந்தது. நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம், 1995 செப்டம்பர் 30-ஆம் தேதி திருச்சி, கரூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.

வடக்கில் பெரம்பலூர், சேலம் மாவட்டங்களையும், கிழக்கில் அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களையும், தெற்கில் புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களையும், வட மேற்கில் நாமக்கல் மாவட்டத்தையும், மேற்கில் கரூர், திண்டுக்கல் மாவட்டங்களையும், திருச்சிராப்பள்ளி மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தை வளங்கொழிக்க வைக்கும் முக்கிய ஆறு காவிரி, காவிரியுடன் அய்யாறு, அமராவதி, நொய்யாறு, மருதையாறு, வெள்ளாறு போன்றவை வந்து சேர்கின்றன. இவையல்லாமல் சின்னாறு, காட்டாறு, கம்பையாறு, ருத்ராட்சா ஆறு, அரியாறு, கொடிங்கால், வாணியாறு, கோரையாறு, குண்டாறு, அம்புலியாறு, பாம்பாறு முதலிய சிற்றாறுகளும் பாய்ந்து ஒரு காலத்தில் இம்மாவட்டத்தை வளப்படுத்தி வந்தது. ஆனால், இன்று இவையனைத்தும் தூய்மை இழந்து, தூர்வாறப்படாமல் நீரின்றி பாலைவனமாக உள்ளது.

திருச்சி முக்கொம்பூர் எனுமிடத்தில் காவிரியிலிருந்து கொள்ளிடம் தனியாகப் பிரிகிறது. காவிரியின் முக்கிய கிளை நதிகள் கொள்ளிடம், வெண்ணாறு, உய்யகொண்டான் ஆறு, குடமுருட்டி, வீரசோழன், விக்ரமனாறு, அரசலாறு முதலியனவாகும். வெண்ணாற்றிலிருந்து வெட்டாறு, வடலாறு, கோரையாறு, பாமனியாறு, பாண்டவயாறு, வெள்ளையாறு முதலியவைப் பிரிகின்றன.

இதில் மிகவும் முக்கியமாக திகழ்வது உய்யகொண்டான் ஆறு, இது திருச்சி மாநகரின் மையப்பகுதியில் ஓடுகிறது. 
இதன் தலைப்பு பகுதி திருச்சி மாவட்ட எல்லையான பெட்டவாய்த்தலையில் தொடங்கி, திருவெறும்பூர் பகுதியில் உள்ள வாழவந்தான்கோட்டை ஏரியில் முடிகிறது. இந்த உய்யகொண்டான் ஆறு 46 கி.மீ. நீளம் கொண்டது. உய்யகொண்டான் ஆறு மூலம் 32,244 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு தலைமை மருத்துவமனை, திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட முக்கியமான அலுவலகங்கள் இந்த ஆற்றின் கரையில்தான் உள்ளது. 

திருச்சி மாநகரத்தின் தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகளின் கழிவு நீர் அனைத்தும்
இந்த உய்யகொண்டான் ஆற்றில் தான் கலக்கின்றது. இதனால் சுகாதார சீர்கேடு உருவாகி நாற்றமெடுக்கின்றது. திருச்சி மாநகரத்தின் குப்பைத் தொட்டியாகவே இது மாறிவிட்டது.

மேலும், உய்யகொண்டான் ஆற்றை ஆக்கிரமித்து பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆகாயத் தாமரை படர்ந்து உள்ளது. மொத்தத்தில் திருச்சியின் கூவமாகவே உய்யகொண்டான் ஆறு உருமாறிவிட்டது.

எனவே, போர்கால அடிப்படையில் உய்யகொண்டான் ஆற்றை தூர்வாறி தூய்மைப்படுத்தவில்லையென்றால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜ சோழனால் வெட்டப்பட்ட இந்த ஆறு, உருக்குலைந்து போய்விடும் அபாயம் உள்ளது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
படங்கள் : வீ.குணசேகரன்.

 

 

One Response

  1. Gopinath May 14, 2018 7:41 pm

Leave a Reply to Gopinath Cancel reply