சிதம்பரம் நகராட்சி பகுதியில் வெறிநாய் கடித்து குதறியதில் 70 வயது முதியவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

காதர் உசேன்.

கடலூர் மாவட்டம்,  சிதம்பரம் நகராட்சி பகுதியில் தெரு நாய் மற்றும்  வெறி நாய்களின் நடமாட்டம் நாளுக்கு  நாள்  அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் வெளியில் வருவதற்கே பயப்படுகிறார்கள். இதை கண்காணித்து தடுக்க வேண்டிய நகராட்சி அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர்.

இந்நிலையில், சிதம்பரம் பெரிய காஜியர் தெருவில் வசிக்கும் காதர் உசேன் (வயது 70) என்ற முதியவர் சிதம்பரம் காசுக்கடைத் தெருவில் நடந்து சென்றபோது, ஒரு வெறி நாய் கடித்து குதறியதில் அதிக அளவில் இரத்த இழப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதல் உதவி சிகிச்சை அளித்தனர். சிதம்பரம் அரசு மருத்துமனையில் வெறி நாய்கடிக்கு மருந்து இல்லாத காரணத்தால், சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சூரிய பிரகாஷ்  செட்டியார்.

இதே வெறி நாய், மேலும் ஓருவரை கடித்ததில் சிறு காயங்களுடன் சூரிய பிரகாஷ்  செட்டியார் என்பவர் உயிர் தப்பியுள்ளார்.

மேற்கண்ட பகுதியில் இந்த வெறிநாய் இரத்த வெறிப்பிடித்து நிரந்தரமாக சுற்றி திரிவதால் முதியவர்களும், பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் பதட்டத்துடனே நடமாட வேண்டியுள்ளது.

சிதம்பரம் நகராட்சியில் நாய் பிடிப்பதற்கு என்று வாகனம் உள்ளது. ஆனால், அந்த வாகனத்தை நகராட்சி பணியாளர்கள் வரி வசூல் செய்ய பயன்படுத்தி வருகின்றனர். 

இந்நிலை தொடர்ந்து நீடித்தால், அப்பகுதி மக்களின் நிம்மதி நிரந்தரமாக பறிபோய்விடும்.

-க.மகேஷ்வரன்.

Leave a Reply