தமிழ் தாத்தா உ.வே.சா 164–வது பிறந்த தின விழா!

திருவாரூர் மாவட்டம், உத்தமதானபுரம் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் பிறந்த இல்லத்தில் அவருடைய 164 – வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

உத்தமதானபுரம் வேங்கட சுப்பையன் மகன் சாமிநாதன் சுருக்கமாக உ.வே.சா என்று எல்லோராலும் அழைக்கப்படும் தமிழ் தாத்தா உ.வே.சா 90–க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சு பதித்துள்ளார் மற்றும் 3000 –க்கும் அதிகமாக ஏட்டு சுவடிகளையும் கையெழுத்து ஏடுகளையும் சேகரித்துள்ளார்.

மேலும், அழிந்து போகும் நிலையில் இருந்த பண்டைய தமிழ் இலக்கியங்களை தேடி அச்சிட்டு பதிப்பித்த தமிழ் அறிஞரும் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகுக்கு அறிய செய்த உ.வே.சா. அவர்களின் 164 – வது பிறந்த நாள் விழா அவர் பிறந்த நினைவு இல்லத்தில் கொண்டாடப்பட்டது.

திருவாரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட திருவாரூர் மாவட்ட ஆட்சி தலைவர் இல.நிர்மல்ராஜ் நினைவு இல்லத்தில் உள்ள உ.வே.சா. திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து பூக்கள் தூவி மரியாதை செய்தார். பின் பல போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற பள்ளி மாணவ மாணவியருக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார்.

இந்த நிகழ்வில் பாபநாசம் நீதிமன்ற நீதியரசர் ராஜசேகர், திருவாரூர் மாவட்ட கோட்டாட்சியர் முத்துமீனாட்சி, செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி மு.தனபால், வட்டாட்சியர் பரஞ்சோதி, பி.டி.ஒ. சண்முகம், பி.டி.ஒ. கிருஷ்ணமூர்த்தி முனைவர் பாஸ்கரன், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக பதிவாளர் உ. முத்துகுமார், ஓலை சுவடித் துறை முனைவர் கலாஸ்ரீதர், உ.வே.சா தமிழ் சங்கத்தின் தலைவர் அன்பழகன், அரசு அதிகாரிகள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். 

-ஜி.ரவிச்சந்திரன்.

3 Comments

  1. G Ramachandram February 20, 2018 11:50 pm
  2. G Ramachandram February 20, 2018 11:51 pm
  3. G Ramachandram February 20, 2018 11:55 pm

Leave a Reply