திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருகோவில் தை பூச திருவிழா திருத்தேரோட்டம்!

கும்பகோணம் மயிலாடுதுறை முக்கிய சாலையில் கும்பகோணதிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள சோழ நாட்டின் காவிரி தென் காரையில் அமையபெற்ற சிவத்தலங்களில், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், கருவூர்த்தேவர், அருணகிரிநாதர், காளமேகபுலவர் முதலானோர்களால் பாடல்பெற்ற தலமாகவும் விளங்க கூடியது திருவிடைமருதூர்..

சந்திரன் வழிப்பட்ட தலமானதால் சந்திர தலமாகவும், வரகுணபாண்டியன் பிரம்மஹத்தி நீங்க வழிப்பட்டதால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் தலமாகவும், நட்சத்திர தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்ககூடியது திருவிடைமருதூர்        ஸ்ரீ பெருநலமாமுலையம்மை உடனுறை ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருகோயில்.

மத்தியார்ச்சுனம்

காசிக்கு நிகராக விளங்ககூடிய  இந்த தலம் திருவாவடுதுறை, திருவலஞ்சுழி, சுவாமி மலை, திருவாரூர், சிதம்பரம், ஆலங்குடி, சீர்காழி, சூரியனார்கோயில், திருவாய்ப்பாடி முதலான பரிவாரத்தலங்கள் சூழ நடுநாயகமாக அமைந்து மத்தியார்ச்சுனம் என போற்றபடுகிறது. 

திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு உட்பட்ட இந்த கோவிலில் தை மாதத்தில் பூசம் நட்சத்திர நாளில் பெரும் திருவிழா கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இந்த வருடம் 14.01.2018-அன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய பெரும் திருவிழாவானது பதினைந்து நாட்களாக நடைபெற்று வருகிறது.

நடைபெற்று வருகின்ற தைப்பூச பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா தைமாத பூசம் நட்சத்திரம் நாளான இன்று மிக சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ மகாலிங்க சுவாமி பரிவார தெய்வங்களுடன் காலை 6.00  மணியளவில் சிவ  வாத்தியங்கள் முழங்க திருதேரில் எழுந்தருளினார். பின்பு சரியாக 10.45 மணியளவில் திருத்தேர் வடம்பிடிக்கப்பட்டது.

திருத்தேரோட்டம்:

பல ஆண்டுகளாக நின்றுபோன திருத்தேரோட்டம் சென்ற 2011 – ஆம் ஆண்டு முதல் தைப்பூச பெருநாளில் மகாலிங்க சுவாமி திருத்தேரும், 2012-  ஆம் ஆண்டு முதல் அம்மன் தேரோட்டமும் மற்ற மூன்று தேர்களும் திருப்பணி முடிந்து 2016 – முதல் ஐந்து தேர்களும் வளம் வருகின்றது.

இந்த நிகழ்ச்சியில் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 24 – ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் மற்றும் கட்டளை விசாரணை ஸ்ரீமத் சுவாமிநாத தம்பிரான் அவர்களும் கலந்துகொண்டு வடம்பிடித்தனர்.

மேலும் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் கலந்துகொண்டனர். ஆலய கண்காணிப்பாளர் மற்றும் ஸ்ரீ மகாலிங்க சுவாமி ஆன்மீக பேரவை – யை சார்ந்தவர்கள் இவ்விழாவின் ஏற்பாட்டினை செய்திருந்தார்கள்.  

-ஜி.ரவிச்சந்திரன்.

Leave a Reply