கவலைக்கிடமாக காட்சியளிக்கும் குடவாசல் பேருந்து நிலையம்! -அதிகாரிகள் அலட்சியம்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் பேருந்து நிலையத்தை நாள்தோறும் 100-க்கு மேற்பட்ட பேருந்துகளும் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட பயணிகள் பல ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகின்றனர்.

நிர்வாக சீர்கேட்டின் காரணமாக பேருந்து நிலையம் மிகுந்த கவலைக்கிடமாக காட்சியளிக்கிறது. தற்போதைய குடவாசல்  பஸ் நிலையம் பொதுமக்கள் மற்றும் பயணிகள் நாள்தோறும் பயன்படுத்த முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள வணிகர்கள் மக்கள் பயன்பாட்டிற்கு என ஒதுக்கப்பட்டுள்ள இடத்தையும் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கான சுகாதார வளாகம் பெயரளவிலேயே உள்ளது. இதனால், பேருந்து பயணிகளின் அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. ஆக்கிரமிப்பாளர்களின் கூடாரமாக உருவாக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுக்கு முன் குடவாசல் டவுன் பஞ்சாயத்து தலைவராக இருந்த வரதராஜன் என்பவர் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரான பி.வி.சிந்தன் என்ற பெயரில் பஸ் நிலையத்தை தோற்றுவித்தார்.

காலப்போக்கில் பல்வேறு தலைவர்கள் மாறி மாறி வந்தாலும் இந்த பஸ்நிலையம் இன்றுவரை மேம்பாடு அடையவில்லை. பேருந்து நிலையம் மிகவும் குறுகியதாக காணப்பட்டதால் 10 ஆண்டுக்கு முன் பஸ் ஒரு புறம் நுழைந்து மறு புறம் வெளியேற வழிவகை செய்யப்பட்டது.

 2002-2004-ல் மணிசங்கர் அய்யர் பாராளுமன்ற தொகுதி  மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டு அதில் காமராஜர் பயணிகள் பஸ் நிலையம் ஓரமாக அமைக்கப்பட்டது. அதன் கீழ், மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா உத்தரவின் பேரில்  தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலும் பாலூட்டும் தாய்மார்களின் சிரமத்தை போக்கும் வகையில் அவர்களுகென்று தனியாக “தாய்மார்கள் பாலூட்டும் அறை” கட்டப்பட்டது. ஆனால், இன்று வரையிலும்  அந்த அறை பூட்டியே கிடப்பதால் திருவாரூரிலிருந்து குடவாசல் வரும் பெண்களும், கும்பகோணத்திலிருந்து குடவாசல் வரும் பெண்களும் குறிப்பாக நன்னிலம், கொரடாச்சேரி, சேங்காலிபுரம் போன்றவற்றில் இருந்து கைக்குழந்தையுடன் வரும் பெண்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.

மேலும், பேருந்து நிலையத்திற்குள் பயணிகளுக்கென்று தனித்தனியாக ஆண்/பெண் இலவச கழிவறை உள்ளது. அதன் அருகில் சைக்கிள் ஸ்டாண்டு இருப்பதால் பெண்கள் இந்த கழிவறைக்கு செல்ல அச்சப்படுகின்றனர். 2011-2012-ல் மாற்றுத்திறனாளிகளுக்கான சுகாதார வளாகம் ரூ.2.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இதுவும் பராமரிப்பின்றி பூட்டியே கிடக்கிறது. இந்த கழிவறை இருக்கும் இடமே தெரியாது என்பதால் இரவில் மதுபானம் அருந்தும் கூடாராமாக மதுப்பிரியர்கள் மாற்றிவிட்டனர். பயணிகளின் இதுபோன்ற அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமா?

-க.குமரன்.

Leave a Reply