மண்ணச்சநல்லூர், இராசாம்பாளையம் செல்லாண்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்!-ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகில் உள்ள இராசாம்பாளையம் செல்லாண்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த மாதம் 31-ஆம் தேதி முகூர்த்த கால் நடப்பட்டது. கடந்த 14-ஆம் தேதி முளைப்பாரி போடப்பட்டது. தொடர்ந்து கிராம கோயில்கள் அனைத்திற்கும் விளக்கேற்றபட்டு பூஜைகள் செய்யப்பட்டன.

நேற்று காலை மருளாளிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனையடுத்து கொள்ளிடம் ஆற்றுக்கு சென்று புனித நீர் எடுத்து வரப்பட்டது. நேற்று மாலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியவாஜனம், வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், ரக்சாபந்தனம், யாகசாலை பிரவேசம், வேதிகா அர்ச்சனை மூல மந்திரஹோமம் உள்ளிட்ட முதல் கால பூஜைகள் நடைபெற்றன.

இன்று காலை 5.30 மணிக்கு மங்கள இசையுடன் விநாயகர் பூஜை, விசேச சாந்தி வேதிகா அர்ச்சனை, நாடி சந்தானம், மகா தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. காலை 7 மணிக்கு காட்டு கோயில் கும்பாபிசேகம் நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு செல்லாண்டி அம்மன் கோயிலில் புனித நீருற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து பெரியகாண்டியம்மன், தும்மாயி அம்மன், தீப்பாஞ்சான், மாயவர், மகாமுனி, குன்னுடையான், தாமரை, பொன்னர், சங்கர், தங்காள், ஆரியராஜா, வேடன், சப்தகன்னிகள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் புனித நீரூற்றி மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

-எஸ்.ஆனந்தன்.

Leave a Reply