தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்து கட்டணங்கள் இன்று முதல் உயர்வு!-பயணிகள் புலம்பல்…!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்து கட்டணங்கள் இன்று (20.01.2018) முதல் திடீரென்று உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு, மாநில போக்குவரத்து கழகத்தின் நிதிநிலையை மட்டுமே கருத்தில் கொண்டு பேருந்து கட்டண உயர்வை நடைமுறைப்படுத்தியுள்ளது. ஆனால், மக்களின் மனநிலையையும், அவர்களின் வாழ்வாதாரச் சூழ்நிலைகளையும் கொஞ்சம்கூட கருத்தில் கொள்ளவே இல்லை என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.

இந்த பேருந்து கட்டண உயர்வுக்கு எத்தனையோ காரணங்களை பக்கம், பக்கமாக தமிழக அரசு எடுத்துரைத்தாலும், அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் தமிழக மக்கள் இல்லை.

தனியார் பேருந்து உரிமையாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதாகதான் இந்த பேருந்து கட்டண உயர்வு அமைந்துள்ளதாக வெளிப்படையாகவே மக்கள் கூறுகிறார்கள்.

பேருந்து கட்டண உயர்வு காரணமாக இன்று பல இடங்களில் பயணிகளுக்கும், பேருந்து நடத்துனர்களுக்கும் வாக்குவாதங்கள் ஏற்பட்டது. இந்த கட்டண உயர்வு ஏழை, எளிய மக்களை வெகுவாகப் பாதித்துள்ளது.

இந்த பேருந்து கட்டண உயர்வு, தமிழக அரசின் மீது மக்களுக்கு  கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு  போக்குவரத்து கழகப் பேருந்துக்கள் நஷ்டத்தில் இயங்குவதற்கு நிர்வாக ரீதியாக ஆயிரத்தெட்டு காரணங்கள் இருக்கிறது. அதை முறையாக கண்காணித்து சீர்செய்வதை விட்டு விட்டு, அவற்றின் சுமைகளையெல்லாம் அப்பாவி மக்களின் மீது ஏற்றுவது எந்த வகையில் நியாயம்?

இந்த பேருந்து கட்டண உயர்வுக்கு பிறகாவது, அரசு  போக்குவரத்து கழகப் பேருந்துக்கள் நிச்சயம் லாபத்தில் இயங்கும் என்ற உறுதியையும், உத்தரவாதத்தையும் தமிழக அரசால் வழங்க முடியுமா? முடியாது என்றால், இந்த கட்டண உயர்வு எதற்கு?

பேசாமல், உயர் நீதிமன்ற நீதிபதிகள் சொன்னதைப்போல, அரசு  போக்குவரத்து கழகத்தை தனியாரிடம் ஒப்படைத்துவிட வேண்டியதுதானே?!

மக்களால் தேர்வு செய்யப்பட்ட  ஒரு அரசாங்கம், மக்களுக்கு சேவை மட்டுதான்தான் செய்ய வேண்டுமே தவிர, மக்களை இப்படி கொடுமைப்படுத்தி வியாபாரம் செய்ய நினைக்கக் கூடாது.

எனவே, இந்த பேருந்து கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால், இதற்கான விளைவுகள் எதிர்வரும் தேர்தல்களில் நிச்சயம் எதிரொலிக்கும்.

அறிவினால் உணர்ந்து கொள்ளாவிட்டால், அனுபவம்தான் நிச்சயம் உணர்த்தும்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com

Leave a Reply