செயலற்று கிடக்கும் குடவாசல் பிரேத பரிசோதனை கூடம்!

திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குடவாசல் அரசு மருத்துவமனைக்கு சுற்றியுள்ள மணப்பறவை, திருக்குடி, செருகளத்தூர், வடவேர், நாலூர், சேங்காலிபுரம், சித்தாடி கிராமங்களிலிருந்து வயதானவர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பல்வேறு சிகிச்சைக்காக வந்து செல்வது  வழக்கம். ஆனால், போதிய அடிப்படை வசதி இல்லாமல் இந்த மருத்துவமனை இருப்பதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

கும்பகோணம்-திருவாரூர் சாலையில்  இம்மருத்துவமனை அமைந்துள்ளதால், பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த    பெண்கள் பிரசவத்திற்காக இம்மருத்துவமனையை நாடுகின்றனர்.

அதேபோல் பல்வேறு விபத்துகளில்  சிக்குவோர் முதலுதவிக்காக குடவாசல் மருத்துவமனை நாடுகின்றனர். சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் அவர்களை திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு; பரிந்துரை செய்கின்றனர்.

ஒருவேளை பிரசவத்திலோ, விபத்திலோ யார் உயிர் இழந்தாலும் அவர்களை பிரேத பரிசோதனை செய்ய இங்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த பிரேத பரிசோதனை கூடம் செயல்பாட்டில் இல்லாத காரணத்தால், திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் அவல நிலை உள்ளது.

இது குறித்து குடவாசல் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்ததாவது:

இங்கு பிரேத பரிசோதனை செய்ய போதிய வசதிகள் இல்லை.டெக்னீசியன்கள் மற்றும் உபகரணங்கள் கிடையாது. ஆகவே, நாங்கள் குடவாசல் அரசு மருத்துவமனைக்கு வரும் இறந்து போன உடல்களை உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விடுவோம் என்கின்றனர்.

-க.மகேஸ்வரன்.

Leave a Reply