கலையம்சம் கொண்ட மனித உருவ கண்ணாடி பாட்டில்!

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 1920 ஆண்டுகளில் தயார் செய்யப்பட்ட கலையம்சம் கொண்ட மனித உருவ பாட்டில் உள்ளது. ஏற்காடு மஞ்சக்குட்டையை சேர்ந்த சத்துணவு அமைப்பாளர் கண்ணையன் என்பவரிடம் இந்த மனித உருவ பாட்டில் உள்ளது. இது ஏற்காட்டில் ஆங்கிலேயர்கள் வாழ்ந்தனர் என்பதனை விளக்குகிறது.

இது குறித்து அறிவியல் எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ கூறியதாவது:

“ஏற்காடு வரலாறு, கலாச்சாரம், பண்பாடு என்கிற நூலை எழுதுவதற்காக ஏற்காட்டில் உள்ள அனைத்து கிராமத்திலும் நான் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். இது குறித்த ஆய்வின்போது இந்த பாட்டிலை காண முடிந்தது. இந்த கண்ணாடி பாட்டில் மனித உருவம் கொண்டது. இப்பாட்டில் 25 செ.மீ. உயரமும், 10 செ.மீ. அகலமும் கொண்டது. பாட்டிலுக்கான திருகு மறையானது 3 செ.மீ நீளத்தில் உள்ளது. இது மனிதனின் முகத் தோற்றம் கொண்டதாக இருக்கிறது. இதனை கொண்டு பாட்டிலினை மூடினால் மனிதனின் முழு உருவம் தெரிகிறது.

இந்த தலை போன்ற மூடியானது 8 செ.மீ நீளம் கொண்டது. மனித தோள் பட்டை வரை மூடியால் செய்யப்பட்டுள்ளது. இந்த மனித உருவம் நீண்ட அங்கி அணிந்திருப்பது போலவும், இடுப்பில் மஞ்சள் நிற கச்சை கட்டியிருப்பது போலவும் தெரிகிறது. கையில் ஒரு கண்ணாடி கோப்பை வைத்திருக்கிறது. தலையில் கிறிஸ்துவ மத பிஷப்கள் அணியும் தொப்பி அணிந்திருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

1920 ஆம் ஆண்டுகளில் மதுபானம், குளிர்பானம், மருந்து, மை மற்றும் வாசணை திரவியம் போன்றவற்றை அடைத்து வைப்பதற்காக பல்வேறு வடிவம் கொண்ட பாட்டில்கள் தயாரிப்பது வழக்கத்தில் இருந்துள்ளது. அக்காலத்தில் ஆப்ரகாம் லிங்கன், நெப்போலியன், புத்தர், மேரி, துப்பாக்கி என பல உருவங்களில் பாட்டில்கள் தயாரித்துள்ளனர்.

நீண்ட அங்கியும், கச்சையும் கட்டிக்கொண்டு விருந்தில் கலந்துக்கொள்ளும் பழக்கம் ஐரோப்பிய பகுதியில் இருந்தது. ஆகவே அது போலவும் பாட்டில்கள் தயாரித்துள்ளனர்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு வரை ஏற்காட்டில் ஆங்கிலேயர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் கலைநயமிக்க பல வகையான கண்ணாடி பாட்டில்களைப் பயன்படுத்தியுள்ளனர். அந்த வகையில், இந்த மனித உருவம் கொண்ட கண்ணாடி பாட்டிலையும் பயன்படுத்தியுள்ளனர். தனக்கு கிடைத்த இந்த பாட்டிலை கண்ணையன் 30 ஆண்டுகளுக்கு மேலாக பாதுகாத்து வருகிறார்.” இவ்வாறு அவர் கூறினார்.

-நவீன் குமார்.

 

 

Leave a Reply