ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு செயல்பாடுகள் – செய்தியாளர்கள் சுற்றுபயணத்தில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி  ஆய்வு!

d1 copy d2 copy

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மகளிர் திட்டம், கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் சுற்று பயணத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு செய்தார்.

மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயிற்சி, செய்து வருகின்ற தொழில், ஈட்டிய வருவாய், பொருளாதார நிலை, ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டறிந்தார்.

தொடர்ந்து  மண்ணச்சநல்லூர் ஒன்றியம், தத்தமங்கலம் ஊராட்சி, ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பின் கணக்காளர் அம்பிகா தெரிவித்ததாவது:

தத்தமங்கலம் ஊராட்சியில் 2013-2014ஆம் ஆண்டு எங்கள் குழுவின் கூட்டமைப்பு துவக்கப்பட்டது. எங்கள் ஊராட்சியில் தெற்கு தத்தமங்கலம், வடக்கு தத்தமங்கலம், சாலப்பட்டி, தேவிமங்கலம், அக்கரைப்பட்டி ஆகிய குக்கிராமங்கள் உள்ளன. 36 குழுக்களில் 466 நபர்கள் குழு உறுப்பினர்களாக உள்ளனர். ஊக்க நிதியாக ரூபாய் 1 இலட்சம் வழங்கப்பட்டதுடன் தொடர்ந்து இதுவரை 9 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. தனிநபர் கடன் தொழிற்பயிற்சி வழங்கியதன் மூலம் எங்களுடைய பொருளாதாரமும், குடும்ப நிலையும் உயர்ந்துள்ளது. கந்து வட்டி, நுண்நிதி நிறுவனங்கள் (மைக்ரோ பைனாஸ்) போன்ற நிதி நிறுவனங்களில் இருந்து நாங்கள் முற்றிலும்  கடன் பெறுவதில்லை. 500 நபர்களுக்கு மானிய விலையில் எரிவாயு இணைப்பு வழங்க உதவி புரிந்துள்ளோம்.

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, உள்ளிட்ட பல்வேறு அரசு உதவிகளை கிராமப்புற மக்கள் பெறுவதற்கு உறுதுணையாக இருக்கின்றோம். தனிநபர் கழிப்பறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைத்து வீடுகளிலும் அமைப்பதறக்கு உதவிகள் செய்து வருகின்றோம். நாங்கள் உறுதுணையாக இருந்து இதுவரை 250 வீடுகளில் தனிநபர் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. மேலும் ஊராட்சி அளவிலான குழுக்கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களில் இருந்து ரூபாய் 15 ஆயிரம் மூதல் ரூபாய் 1 இலட்சம் வரை கடனுதவிகள் பெற்று பல்வேறு தொழில்கள் செய்து நலிவுற்ற குடும்பங்கள் உயர்ந்துள்ளது. வேலைவாய்ப்புடன் கூடிய இலவச பயிற்சியும் வழங்கப்பட்டு வருகின்றது. ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பின் மூலம் எங்கள் கிராமத்தை சேர்ந்த பெண்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தொடாந்து எங்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றது. இவ்வாறு தத்தமங்கலம் ஊராட்சி, ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பின் கணக்காளர் அம்பிகா தெரிவித்தார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

 திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 9481 குழுக்குள் உள்ளது. கிராமப்புறங்களில் 8949 குழுக்களும், நகர்ப்புறங்களில் 532 குழுக்களும் உள்ளது. இவற்றில் 1 இலட்சத்து 32 ஆயிரத்து 612 நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 404 ஊராட்சிகளிலும் ஊராட்சி அளவிலான குழுக்கூட்டமைப்பு உள்ளது. 417 வறுமை ஒழிப்பு சங்கங்களும் செயல்பட்டு வருகின்றது.

பல்வேறு தொழில்கள் தொடங்குவதற்கு புத்தாக்க பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. தொழில் சார்ப் பயிற்சி, (DDUGKY) திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. வட்டாரம் வாரியாக வேலைவாயப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றது.

அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு பயனாளிகள் தேர்வில் வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கடைகோடி கிராமமாக இருந்தாலும் கூட இக்குழுக்களில் பங்கேற்ததின் மூலம் சமூக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் உயர்ந்துள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், 2012-13-ஆம் ஆண்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், வங்கிகளின் மூலமாக நேரடிக்கடனாக 4534 குழுக்களுக்கு ரூபாய் 105.88 கோடியும், 2013-14-ஆம் ஆண்டில் வங்கிகளின் மூலமாக நேரடிக்கடனாக 5242 குழுக்களுக்கு ரூபாய் 127.03 கோடியும், 2014-15-ஆம் ஆண்டில் வங்கிகளின் மூலமாக நேரடிக்கடனாக 6295 குழுக்களுக்கு ரூபாய் 154.43 கோடியும், 2015-16-ஆம் ஆண்டில் வங்கிகளின் மூலமாக நேரடிக்கடனாக 6627 குழுக்களுக்கு ரூபாய் 149.42 கோடியும் பெற்று தரப்பட்டுள்ளது. 2016-17ஆம் ஆண்டில் 4862 குழுக்கள் உள்ளது. இக்குழுக்களுக்கு ரூபாய் 148.44 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு 2017-2018ஆம் ஆண்டு 175 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 105 கோடி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளதின் மூலம் பெண்களின் வாழ்வாதாரம் உயர்ந்து பொருளாதாரம் உயர்ந்துள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 2016-17-ஆம் ஆண்டிற்கு, 18 வயது பூர்த்தியடைந்த, 10th, +2, Diploma  மற்றும் Degree படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 7 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 3539 இளைஞர்கள் பங்கேற்றதில் 2361 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, 2017-18-ஆம் ஆண்டிற்கு மாவட்ட அளவில் 2 வேலை வாய்ப்பு முகாம்களும், வட்டார அளவில் 14 வேலை வாய்ப்பு முகாம்களும் நடத்திடவும் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து,  மாவட்ட அளவில் முதற்கட்டமாக வேலைவாய்ப்பு முகாம் (JOB MELA) நடத்தப்பட்டதில் 2234 நபர்கள் கலந்து கொண்டதில் 444 நபர்களுக்கு பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், வட்டார அளவில் நாளது தேதிவரை 5 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 4065 நபர்கள் கலந்து கொண்டதில் 803 நபர்களுக்கு பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

மகளிர் சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்திடவும் ஏதுவாக 2016-17-ஆம் ஆண்டில் 4 கல்லூரிகளில் “கல்லூரிச் சந்தைகள்” நடத்தப்பட்டு ரூ.2.65 இலட்சம் மதிப்பீட்டிலான உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

2017-18-ஆம் ஆண்டிற்கு தற்போது ஹோலிகிராஸ் கல்லூரியில் டிசம்பர் 19, 20 மற்றும் 21.12.2017 ஆகிய நாட்களில் கல்லூரி சந்தை நடத்தப்பட்டது.  மேலும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களைச் சார்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்திடும் பொருட்டு, தேசிய அளவிலான SARAS கண்காட்சி 27.12.2017 முதல் 07.01.2018 வரை 12 நாட்களுக்கு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட்டு வரும் 4 ஊராட்சி ஒன்றியங்களைச் (மண்ணச்சநல்லூர், மருங்காபுரி, தொட்டியம் மற்றும் தா.பேட்டை) சார்ந்த 135 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு நாளது வரை துவக்கநிதி, சமுதாய முதலீட்டு நிதி மற்றும் விவசாயம் சாராத் தொழில் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு நாளது வரை ஒரு கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்திற்கு ரூ.16.00 இலட்சம் வீதம் 135 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு மொத்த நிதியாக ரூ.2160.00 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.  திருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இரண்டாம் கட்டமாக செயல்படுத்தப்பட்டு வரும் 5 ஊராட்சி ஒன்றியங்களைச் (அந்தநல்லூர், மணிகண்டம், மணப்பாறை, முசிறி மற்றும் துறையூர்) சார்ந்த 138 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு நாளது வரை துவக்கநிதி மற்றும் சமுதாய முதலீட்டு நிதியாக ரூ.487.00 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூன்றாம் கட்டமாக செயல்படுத்தப்பட்டு வரும் 5 ஊராட்சி ஒன்றியங்களில் (இலால்குடி, புள்ளம்பாடி, திருவெறும்பூர், உப்பிலியபுரம் மற்றும் வையம்பட்டி) அமைக்கப்பட்ட 137 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களில், 134 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு துவக்கநிதியாக ரூ.87.10 இலட்சமும் மற்றும் 2017-18-ஆம் ஆண்டில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொழில் நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக, சமுதாய முதலீட்டு நிதியாக ஒரு கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்திற்கு ரூ.1.00 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.134.00 இலட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூன்றாம் கட்டமாக செயல்படுத்தப்பட்டு வரும் 5 ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 134 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு 2017-18-ஆம் ஆண்டில் நலிவுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு வகையான சிறு தொழில்கள் மேற்கொள்ளும் வகையில் தனிநபருக்கு கடன் தொகை வழங்கிட ஏதுவாக, ஒரு கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்திற்கு ரூ.25,000 வீதம் மொத்தம் ரூ.33.50 இலட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூன்றாம் கட்டமாக செயல்படுத்தப்பட்டு வரும் 5 ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 134 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களில் அமைக்கப்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கிடும் பொருட்டு, 2017-18-ஆம் ஆண்டிற்கு ஒரு குழுவிற்கு ரூ.15,000 வீதம் 267 குழுக்களுக்கு மொத்தம் ரூ.40.05 இலட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் மூன்றாம் கட்ட வட்டாரங்களைச் சார்ந்த 134 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு ரூபாய் 2 கோடியே 94 இலட்சத்து 65 ஆயிரம் விடுவிக்கப்பட்டுள்ளது.

ஒரே ஊராட்சியில் ஒரே தொழில் நடவடிக்கை மேற்கொள்ளும் பல்வேறு மகளிர் குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களை ஒருங்கிணைத்து ஒரே குழுவாக அமைக்கப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் நாளது வரை 136 ஒத்த தொழில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் செயல்படுத்திடும் பொருட்டு, நகர்ப்புற பகுதிகளில் நாளது வரை 12 பகுதி அளவிலான குழுக் கூட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் செயல்படுத்திடும் பொருட்டு, 2016-17-ஆம் ஆண்டிற்கு நகர்ப்புற பகுதிகளைச் சார்ந்த தொழில் நடவடிக்கை மேற்கொள்ளும் 400 நபர்களுக்கு வங்கிகளின் மூலம் ரூ.212.78 இலட்சம் கடனாக பெற்று தரப்பட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் செயல்படுத்திடும் பொருட்டு, 2016-17-ஆம் ஆண்டிற்கு நகர்ப்புற பகுதிகளைச் சார்ந்த தொழில் நடவடிக்கை மேற்கொள்ளும் 92 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகளின் மூலம் ரூ.451.23 இலட்சம் கடனாக பெற்று தரப்பட்டுள்ளது. 2016-17-ஆம் ஆண்டிற்கு நாளதுவரை நகர்ப்புற பகுதிகளைச் சார்ந்த மகளிர் 312 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10,000 மான்யம் வீதம் மொத்தம் ரூ.31.20 இலட்சம் மான்யம் விடுவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சுற்றுபயணத்தில் திட்ட இயக்குநர்/இணை இயக்குநர் (மகளிர் திட்டம்) பி.பாபு, மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் எஸ்.மகாலெட்சுமி, உதவி திட்ட அலுவலர் பெ.அறிவழகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்ரா, சாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

-எஸ்.ஆனந்தன்.

 

 

 

 

Leave a Reply