புலிப்பாணி சித்தரின் ஜோதிட ரகசியங்கள்…!

Pulippanni

புலிப்பாணி என்பவர், பதினெட்டு சித்தர்களுள் ஒருவர். இவர் போகரின் சீடர்.போகரின் தாகம் தீர்க்க புலியின் மீது அமர்ந்து நீரெடுத்து வந்ததால் இவர் (புலி +பாணி) “புலி பாணி” என்று பெயர் பெற்றார். புலிப்பாணியின் குருநாதர் போகரின் ஜீவசமாதி பழனி மலையில் உள்ளது.

புலிப்பாணி சித்தர் வைத்தியம் 500, சாலம் 325, வைத்திய சூத்திரம் 200, பூசா விதி 50,சண்முக பூசை 30, சிமிழ் வித்தை 25, சூத்திர ஞானம் 12 மற்றும் சூத்திரம் 90 எனப் பலசுவடிகளை எழுதியுள்ளார். அவற்றுள் சில சுவடிகள் மட்டுமே நூல்களாக அறியப்பட்டுள்ளன

ஒரு மனிதன் பிறக்கும் போது வானில் உள்ள கிரக மண்டலங்களின் அமைப்பு மற்றும் கிரகங்களின் நிலை, நட்சத்திர அமைப்பு ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் குண நலன்கள் மற்றும் வாழ்க்கைப் பாதையைக் கடக்கும் போது ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றினைத் துல்லியமாக கணித்து நம் முன்னோர்கள் பலர், பல அறிய நூல்களை நமக்காக அர்பணித்து சென்றுள்ளனர்.

அத்தகைய ஜோதிட சாஸ்திரங்களில் அரிய பொக்கிஷமாக இருப்பது புலிப்பாணி சித்தரின்புலிப்பாணி ஜோதிடம் 300என்னும் சுவடியாகும். இதில் உள்ள 300 பாடல்களும், மானுட வாழ்விற்கு கச்சிதமாக பொருந்தி வருகிறது. இதன் மூலமாக ஒருவருடைய வாழ்வில் நடந்த, நடக்கும், நடக்க போகும், முக்கால இரகசியங்களையெல்லாம் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

கற்ற கல்வியும், பெற்ற அனுபவமும் மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என்பதை வாழ்நாள் லட்சியமாக  கொண்டுள்ள  நாம்,  நமதுஉள்ளாட்சித்தகவல்” இணையஊடக வாசகர்களின் நீண்ட கால வேண்டுகோளை ஆணையாக ஏற்று, எவ்வித  வியாபார நோக்கமும் இன்றி, ஜோதிட சாஸ்திரங்களை உள்ளது உள்ளப்படி, உலகறிய செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் இங்கு பதிவு செய்ய முற்பட்டுள்ளேன்.

அதற்கு, தஞ்சாவூர்  சரபோஜீ மன்னர் அரண்மனையில் உள்ள சரஸ்வதி மகால் நூலகத்தில், நான் 15 ஆண்டுகளுக்கு முன்பு முறைப்படி பயின்ற  “சுவடியியல்” இதற்கு முழுமையாக பயன்படும் என்று நான் முழுமையாக நம்புகின்றேன். அதற்கு காலம் நமக்கு கை கொடுக்க வேண்டும். நம் கனவுகள் மெய்பட வேண்டுமென்று கால தேவனை வேண்டுகின்றேன்.

நான் எழுதுவதுதான் வேதவாக்கு!  நீங்கள் படிப்பதுதான் தலையெழுத்து! என்று கருதாமல், இடையிடையே தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களையும், தங்களின்  மேலான எண்ணங்களையும் எங்களோடு  பகிர்ந்து  கொள்ளுங்கள். அப்போதுதான்  இந்நோக்கம்  முழுமையாக வெற்றியடையும்.

பாடல் 1 – கடவுள் வாழ்த்து

ஆதியெனும் பராபரத்தின் கிருபைகாப்பு

அன்பான மனோன்மணியாள் பாதங்காப்பு

சோதியெனும் பஞ்சகர்த்தாள் பாதங்காப்பு

சொற்பெரியகரிமுகனுங் கந்தன்காப்பு

நீதியெனு மூலகுரு முதலாயுள்ள

நிகழ்சித்தர்போகருட பாதங்காப்பு

வாதியெனும் பெரியோர்கள் பதங்காப்பாக

வழுத்துகிறேன் ஜோசியத்தின் வன்மைகேளே

-புலிப்பாணி சித்தர்

ஆதியென்றும் பராபரை என்றும் அகிலமெல்லாம் போற்றும் அகிலாண்ட நாயகியாளின் திருவடிக்கமலங்கள் எனக்குக் காப்பாக அமையும். என்றென்றும் எவ்வெவர்க்கும் அன்பு வடிவாக இயங்கி ஆதரித்திடும் மனத்திற்குகந்த இன்பம் அருளும் மனோன்மணியான வடிவுடை நாயகியின் செந்தாள் மலர்க்கமலம் எனக்குக் காப்பாக அமையும். மற்றும் சோதிவடிவாக இலங்கி மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளின் நுகர்வாய் அமைந்த ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசையென்னும் ஐம்புல நுகர்வுகளுக்கு உரிமை கொண்ட தெய்வங்கள், எனக்குக் காப்பாக அமைவதுடன் ஓங்காரத்துட் பொருளைத் தன்னுருவிலேயே கொண்ட வேலமுகத்தானும் அவனது விருப்பினுக்குரிய அருட்பெருங் கடலான திருமுருகனும் எனக்கு காப்பாக அமைவதுடன், நீதியினையே என்றும் பொருளாய்க் கொண்டு இலங்குகின்ற பிரகஸ்பதி முதலாக உள்ள சித்தர்களில் என் குருவாகிய போகரது திருவடிகளும் எனக்குக் காப்பாக அமைவதுடன் என்றென்றும் தங்கள் அருள் நோக்கால் ஆதி முதல் என்னை ஆதரிக்கும் சான்றோர் தமது திருவடிக்கமலங்களைச் சிரசில் சூடி, நீதியான முறையில் சோதிடத்தின் வன்மையினை நான் உரைப்பேன். கேட்டுப் பயனடையுங்கள்

டாக்டர். துரைபெஞ்சமின்., B.A.M.S., M.A. Sociology.,

Ex.Hony.A.W.Officer.,Govt. of India,

ஆயுர்வேத மருத்துவ  நிபுணர் & மருத்துவ  மற்றும் ஜோதிட சுவடிகள் ஆய்வாளர்.

E.Mail : ullatchithagaval@gmail.com