அடிப்படை வசதிகள் அற்ற மருத்துவக் கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை நடத்தி கொள்ள அனுமதி வழங்கியதாக வழக்கு : முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணியிடம் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி விசாரணை!

Dr.ANBUMANI RAMADOSSஅடிப்படை வசதிகள் அற்ற மருத்துவக் கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை நடத்தி கொள்ள அனுமதி வழங்கியதாக, முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாசுக்கு எதிராக தொடரப்பட்ட ஊழல் வழக்கின் விசாரணை வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி தொடங்கும் என்று டெல்லி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், கடந்த 2004 முதல் 2009 வரை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகித்தவர், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ். அப்போது, மத்திய பிரதேச மாநிலம், இந்தூரைச் சேர்ந்த, இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு, 2008 – 2009-ம் ஆண்டில், மாணவர்களைச் சேர்க்க அனுமதி வழங்கப்பட்டது.

இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம்

இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம்

‘இந்திய மருத்துவக் கவுன்சிலும், உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவும், அனுமதி வழங்கக்கூடாது’ என பரிந்துரைத்திருந்த நிலையில், அன்புமணி ராமதாசு சட்டவிரோதமாக அனுமதி வழங்கியதாகவும், இதில், ஊழல் நடந்திருப்பதாகவும் புகார் எழுந்தது.

இதையடுத்து, இந்த ஊழல் குறித்து விசாரிக்க, சி.பி.ஐ.,க்கு உத்தரவிடப்பட்டது. வழக்கை விசாரித்த சி.பி.ஐ., அதிகாரிகள், 2012 ஏப்ரல், 27-ம் தேதி, டெல்லி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், அன்புமணி மற்றும் 10 பேருக்கு எதிரான, ஊழல் வழக்கின் விசாரணையை, டிசம்பர், 2-ம் தேதி விசாரணைக்கு, பட்டியலிடும்படி, டெல்லி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி மது ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.

”வழக்கில் ஆஜரான சி.பி.ஐ., வழக்கறிஞர் மாற்றப்பட்டு விட்டார். நான்கு மாதங்களுக்கு மேலாகியும், வேறு வழக்கறிஞர் இன்னும் நியமிக்கப்படவில்லை. அதனால், குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விவாதம், டிசம்பர், 2ம் தேதி நடைபெறும்,” என்று அவர் கூறியுள்ளார்.

-ஆர்.அருண்கேசவன்.