சமையல் அறை இல்லாத பள்ளிக் கூடம்!

ye2407P3

திறந்த வெளியில் சமையல் செய்யும் காட்சி

திறந்த வெளியில் சமையல் செய்யும் காட்சி

கட்டி முடிக்கப்படாமல் இருக்கும் கட்டிடம்

கட்டி முடிக்கப்படாமல் இருக்கும் கட்டிடம்

சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டம், கரடியூர் கிராமத்தில் ஒரு துவக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 26 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.

அருகில் உள்ள கொளகூர், உள்ளிட்ட சில கிராமத்தில் இருந்துதான் இந்த பள்ளிக்கு குழந்தைகள் படிக்க வருகின்றனர். எனவே, இவர்கள் மதிய உணவிற்கு இங்கு பள்ளியில் வழங்கும் சத்துணவையே நம்பியுள்ளனர்.

இந்நிலையில் ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த பள்ளியின் சமையற் கூடமானது பழுதடைந்த நிலையில், புதிய சமையற் கூடம் கட்ட ஏற்காடு ஒன்றியத்தின் சார்பில் டெண்டர் விடப்பட்டு பணி நடைப்பெற்று வந்துள்ளது.

கட்டிடம் பாதி கட்டி முடிக்கப்பட்ட நிலையில் அரசு அதிகாரிகள் கட்டிடத்தின் வடிவமைப்பை மாற்றி கட்ட சொன்னதால் டெண்டர் எடுத்தவர், டெண்டரில் குறிப்பிட்ட பணத்திற்கு கட்டிடத்தை கட்ட முடியாது எனக் கூறி கட்டிடத்தை கட்டி முடிக்காமல் பாதியிலேயே விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் சமையல் செய்வதற்கு இடம் இல்லாததால், கிராமத்தின் பொது இடத்தில் திறந்த வெளியில் சமைத்து எடுத்து வந்து பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கி வருகின்றனர். திறந்த வெளியில் சமைப்பதால் சுகாதாரச் சீர்கேடும், பல்வேறு மாசுக்கள் உணவில் விழும் ஆபத்தும் உள்ளது.

மழை காலங்களில் அந்த கிராமத்தில் உள்ள ஏதேனும் ஒரு வீட்டில் சமைப்பதாகவும், பலத்த மழை பெய்யும் நேரத்தில் ஒரு சில நாட்கள் சமையலே செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது எனவும் பொது மக்கள் கூறுகின்றனர்.

இது குறித்து ஏற்காடு ஒன்றிய பி.டி.ஓ துளசிராமனிடம் கேட்டபோது. இந்த கட்டிடத்தைக் கட்ட குத்தகை எடுத்தவரை அழைத்துப் பேசி, குத்தகை பணம் சிறிது அதிகப்படுத்தி கொடுத்துள்ளதாகவும், அடுத்த மாதத்திற்குள் சமையற்கூடம் கட்டி முடிக்கப்படும் என நம்மிடம் கூறினார்.

-நவீன் குமார்.