சிறிலங்காவில் மதக் கலவரம்: கொதித்தெழும் சர்வதேசச் சமூகம்!

sl1 sl2பௌத்த மதத்தின் பெயரால் கத்தோலிக்க கிறிஸ்தவத் தேவாலையங்கள், இந்து கோயில்கள், பள்ளிவாசல்கள் தாக்கப்படுதல், அழிக்கப்படுதல் என்பன சிறிலங்காவிற்கு புதிய சம்வங்கள் அல்ல. காலங்காலமாகவே நடந்து வரும் அவலங்கள்தான்.

இத்தகைய வன்முறை சம்பவங்களுக்கு தலைமை தாங்கி வழி நடத்துபவர்கள் பெரும்பாலும் பௌத்த மதத் துறவிகளாவே இருந்திருக்கின்றனர். இவ்வாறான வன்முறைகளுக்கு, இலங்கை சிங்கள அரசாங்கம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவாகவே இருந்து வந்திருக்கிறது.

உண்மையை சுட்டிக்காட்டும் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் இலங்கை அரசினால் தாக்கப்பட்டோ, அழிக்கப்பட்டோ வந்திருக்கிறார்கள் என்பதுதான் இலங்கையின் வரலாறு.

கடந்த 15.06.2014 ஞாயிற்றுக்கிழமை அழுத்கமவில் நடைபெற்ற பௌத்த, முஸ்லீம் கிளர்ச்சியில் 4 பேர் உயிரிழந்துள்ளார்கள், 78 பேர் காயமடைந்திருக்கின்றார்கள் என சிறிலங்கா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றது.

கலவரம் இடம் பெற்ற பகுதி சிறிலங்காவின் தென் மேற்குக் கரையோரப் பகுதியாகும். சம்பவமானது இலங்கை அதிபர் மகிந்தா ராஜபட்ஷேவின் கோட்டைக்கு அண்மையில் இடம் பெற்றிருக்கின்றது. அப்பகுதியில் அதிகமான கடைகள், வீடுகள் என்பன முஸ்லீம் மக்களுக்குச் சொந்தமானவை. அவைகள் வழமையைப் போல தீக்கிரையாக்ககப்பட்டிருக்கின்றன.

கடந்த 15.06.2014 ஞாயிற்றுக்கிழமை கலவரம் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசு ஊரடங்குச் சட்டத்தை அப்பகுதியில் அமுலாக்கியிருக்கின்றது. அத்துடன் கிளர்ச்சியில் சிங்கள, பௌத்த சக்திகள் பின்னணியில் கலவரகாரர்கள் கும்பலாக சென்று மூஸ்லீம் மக்களையும், உடமைகளையும் கற்கள், எரி குண்டுகள், கத்திகள், துப்பாக்கிகள் பயன்படுத்தித் தாக்கியிருக்கிறார்கள்.

அத்துடன் 3 பள்ளிவாசல்களும், பல முஸ்லீம் மக்களின் பிரார்த்தனை வீடுகளும், தீ மூட்டப்பட்டிருப்பதாக தெரிகிறது.

பௌத்தவாதிகளினால் நடத்தப்பட்ட தாக்குதல் கிட்டத்தட்ட 2 மணி நேரங்களுக்கு நீடித்ததாகவும், அதுவரையில் அங்கு பொலிசார் எவரும் வரவில்லையெனவும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.

ஆனால், கலவரத்தில் இறந்தவர்களது உடல்களை எடுத்துச் செல்வதற்காக 16.06.2014 திங்கட்கிழமைதான் சிறிலங்காப் பொலிசார் அங்கு வந்தார்கள் எனவும் தெரிகின்றது.

தமது அரசினால் இவ்வாறான தாக்குதலை தடுப்பதற்கு கதியற்றதாகிவிட்டது எனவும், 72 மணி நேரங்களாக அங்கு நடைபெறவிருந்த பௌத்தவாதிகளின ஆர்ப்பாட்டத்தைத் தடுக்கும்படி அரசிடம் கேட்டிருந்தோம் எனவும், தான் அமைச்சராக இருந்தும் தனது சொந்த மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியவில்லையென்பதால் தான் மிகவும் வெட்கப்படுவதாகவும், சிறிலங்காவின் நீதித்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருக்கின்றார்.

slஅதே நேரம், பொலிவியாவில் சுற்றுலா மேற்கொண்டிருக்கும் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபட்ஷே, தனது அரசானது சட்டத்தைத் தனக்குச் சாதகமாக கையில் எடுத்துக்கொள்ள எவரையும் அனுமதிக்காது என ‘டிவிட்டர்’ தளத்தில் 15.06.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு பதிவு செய்திருக்கின்றார். இவரது சொல்லுக்கும், செயலுக்கும் ஏதாவது தொடர்பிருக்கின்றதா?

இந்த மதக்கலவரம் தொடர்பாக ஐ.நா. உட்பட, உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்துள்ளன. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் அனைத்தும், இலங்கை அரசாங்கத்தை கடுமையான வார்த்தைகளால் எச்சரித்துள்ளதோடு களத்தில் இறங்கி போராடவும் தொடங்கி விட்டன.

அழுத்கம, தர்கா டவுன், பேருவளை வெலிப்பன ஆகிய நகரங்களில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கும், பல கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்து அழிப்பிற்கும் காரணகர்த்தாவாக இருந்த, பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரையும், அவரது அடியாட்களையும், இலங்கை அரசாங்கம் இன்னும் கைது செய்ய வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.