காவிரி நதிநீர் பிரச்சினையில், தமிழக முதலமைச்சர் உங்கள் முன் வைத்துள்ள கருத்துக்கள், தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் எல்லைகளைக் கடந்து, ஏழரைக் கோடி தமிழக மக்களின் புரிதலையும், உணர்வுகளையும் பிரதிபலிக்கும் முறையீடாகும். இதில் தமிழக அரசின் கருத்துக்களை நான் முழுமையாக ஆதரிக்கிறேன் : பிரதமர் நரேந்திர மோதிக்கு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடிதம்!

narendra-modi-vaikoபிரதமர் நரேந்திர மோதிக்கு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று (15.06.2014) தொலை நகலில் அனுப்பி கடிதத்தில்,

’’தமிழக மக்களுக்கு மிகுந்த கவலை தருகின்ற முக்கியத்துவம் வாய்ந்த காவிரி பிரச்சினையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, நீதி வழங்கிட வேண்டி உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

கர்நாடக மாநிலத்தோடு எழுந்த காவிரி நதிநீர் பிரச்சினையில், இந்தியாவின் உச்ச நீதிமன்றம், ‘மத்திய அரசு காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்’ என்று ஆணையிட்டதன் பேரில் 1990 ஜூன் மாதத்தில் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. நடுவர் மன்றம் 1991 ஜூன் மாதம் 25 ஆம் தேதி இடைக் கால ஆணை பிறப்பித்தது.

இந்திய அரசியல் சட்டத்தின் நெறிகளை காற்றில் பறக்கவிட்டு, ஒரு மாத காலத்துக்குள் 1991 ஜூலை 25 இல் நடுவர்மன்ற இடைக்கால ஆணையை முற்றிலும் நிராகரித்து கர்நாடக அரசு அவசரச் சட்டம் பிரகடனம் செய்தது.

இச்செயல் இந்தியாவில் எந்த மாநிலமும் அதுவரை செய்ய முற்படாத அரசியல் சட்டத்துக்கு விரோதமானதும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிரானதுமான செயல் ஆகும்.

இதனால்தான் உச்ச நீதிமன்றம், கர்நாடக அவசரச் சட்டம் இந்திய அரசியல் சட்டத்துக்கு முரணானது என்று கூறி, ‘அவசரச் சட்டம் செல்லுபடியாகாது என்றும், நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணை சட்ட பூர்வமானது என்றும், மத்திய அரசு அதை அரசிதழில் வெளியிட வேண்டும்’ என்றும் தீர்ப்பளித்தது. அதன்படி நடுவர் மன்றத்தில் இடைக் கால ஆணை மத்திய அரசிதழில் பிரசுரிக்கப்பட்டது.

இப்பொழுது எழுந்துள்ள பிரச்சினை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடக அரசின் நியாயமற்ற சட்ட விரோதமான போக்கினை வெளிப்படுத்தி, மறுக்க முடியாத விளக்கங்களோடு உங்களுக்கு ஜூன் 13 ஆம் தேதி ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார்.

தமிழக முதலமைச்சர் உங்கள் முன் வைத்துள்ள கருத்துக்கள் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் எல்லைகளைக் கடந்து ஏழரைக் கோடி தமிழக மக்களின் புரிதலையும் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் முறையீடாகும். இதில் தமிழக அரசின் கருத்துக்களை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கர்நாடக அரசு எதிர்ப்பதில் எந்த நியாயமும் இல்லை. எனவே காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைக்க வேண்டியது இந்திய அரசின் கடமையாகும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக காவிரியில் கர்நாடகம் தேவையான தண்ணீரைத் திறந்துவிடாததால், தமிழ் நாட்டில் காவிரிப்படுகை விவசாயிகள் மிகப்பெரிய இழப்புகளுக்கும், துன்பத்துக்கும் ஆளாகி உள்ளனர்.

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகள் கண்ணீரில் தவிக்கின்றனர். ஐந்து இலட்சம் ஏக்கர் நிலங்கள் குறுவை சாகுபடியை இழக்க நேரிடும்.

காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழக மக்களுக்கு நீதி வழங்க வேண்டுகிறேன்.”என்று கூறியுள்ளார்.