திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் திருச்சி காவிரி பாலம் சஞ்சீவி நகர் அருகில் விபத்து !

Photo-0014 Photo-0006  Photo-0011Photo-0010

Photo-0015

திருச்சி பொன்மலைப்பட்டியில் வசித்து வருபவர் சங்கர். தமிழ் கன்ஷ்ட்ரெக்ஷன் என்ற தனியார் நிறுவனத்தில் இவர் இஞ்சினியராக வேலை பார்த்து வந்தார். இன்று (11.04.2014) பகல் 12 மணியளவில் மோட்டார் பைக்கில் தன் மனைவியை அழைத்து கொண்டு திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் திருச்சி காவிரி பாலம்  சஞ்சீவி நகர் அருகில் சர்வீஸ் ரோட்டிலிருந்து திரும்புவதற்கு முயற்சித்த போது அதிவேகமாக வந்த எம்.ஆர்.டி.எஸ் என்ற தண்ணீர் லாரி, மோட்டார் பைக்கின் மீது பயங்கரமாக மோதியது. இதில் சங்கர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். அவரது மனைவி லேசான காயத்துடன் உயிர் பிழைத்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி காவிரி பாலம்  சஞ்சீவி நகர் அருகில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. இந்த இடத்திற்கு 100 மீட்டர் தூரத்தில் தான் திருச்சி (கிழக்கு) மண்டல போக்குவரத்து அலுவலர் அலுவலகம் உள்ளது.

சத்திரம்பேருந்து நிலையத்திலிருந்து, கல்லணை செல்வதற்கு காவிரி ஆற்றின் தென்பகுதியில் படித்துறை, ஓயாமரி சுடுகாடு மார்க்கமாக      திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்து பனையக்குறிச்சி, சர்கார்பாளையம், சிவன்கோவில், கீழமுல்லக்குடி, ஒட்டக்குடி, காந்திபுரம், மற்றும் புத்தாபுரம் ஆகிய கிராமங்களின் வழியாக கல்லணை செல்வதற்கு பாதுகாப்பான வழி தடம் இருந்தது. திருச்சியிலிருந்து கல்லணை செல்வதற்கு இதுதான் விரைவாகவும், குறைந்த தூரம் உள்ள வழி தடமாகும். அதனால்தான் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா வாகனங்கள் இந்த மார்க்கத்தில்  கல்லணைக்கு செல்கின்றன.

ஆனால், மத்திய காங்கிரஸ் ஆட்சியில் அப்போது தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்த தி.மு.க.வை சேர்ந்த டி.ஆர்.பாலு திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கல்லணை செல்லும் சாலையை எந்த வித முன்அறிவிப்பும் இன்றி இரவோடு, இரவாகத் தடுப்பு சுவர்களை எழுப்பி பாதையை அடைப்பதற்கு உத்தரவிட்டார். 

இந்த இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைத்து கொடுக்குமாறு பனையக்குறிச்சி, சர்கார்பாளையம், சிவன்கோவில், கீழமுல்லக்குடி, ஒட்டக்குடி, காந்திபுரம், மற்றும் புத்தாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் அப்போது தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்த தி.மு.க.வை சேர்ந்த டி.ஆர்.பாலுவை நேரில் சந்தித்து பல முறை கோரிக்கை வைத்தனர். ஆனால், டி.ஆர்.பாலு அதைப்பற்றி கண்டு கொள்ளவே இல்லை.

இவற்றின் விளைவாக கல்லணை செல்லும் பேருந்துக்களும், சுற்றுலா வாகனங்களும் சஞ்சீவிநகர் என்ற இடத்தில்  தேசிய நெடுஞ்சாலையில் திரும்பி ஒரு வழிபாதையில் எதிர்கொண்டு கடந்து கல்லணை சாலையை வந்தடைய வேண்டியிருக்கிறது. இதனால் சஞ்சீவிநகர் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்புக்கள் ஏற்படுகின்றன.

எனவே, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவிரி ஆற்றின் தென்பகுதியில் கல்லணை செல்லும் சாலையில் சுரங்கபாதை அமைத்தால்தான் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

– டாக்டர்.துரைபெஞ்சமின்.

படங்கள் : கே.பி.சுகுமார்.