கன்னத்தில் அறைந்த ஆட்டோ டிரைவரை நேரில் சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால்!

kejriwal- attackkejriwal- attack.jpg2

 ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் 08.04.2014 செவ்வாய்க்கிழமை டெல்லி சுல்தான்பூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மாலை அணிவித்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அவரது கன்னத்தில் அறைந்தார். அடித்த நபரை ஆம் ஆத்மி கட்சியினர் எதிர் தாக்குதல் நடத்தி போலீசில் ஒப்படைத்தனர்.

அரவிந்த் கெஜ்ரிவாலை கன்னத்தில் அறைந்தவர் டெல்லியை சேர்ந்த ஒரு ஆட்டோ டிரைவர் என்று தெரியவந்தது. இதனையடுத்து, அவரை சந்திக்க விரும்புவதாக தனது கட்சியினரிடம் கெஜ்ரிவால் தெரிவித்தார். அந்த நபரின் விலாசத்தை தெரிந்து கொண்ட ஆம் ஆத்மி கட்சியினர் கெஜ்ரிவாலின் விருப்பத்தை ஆட்டோ டிரைவரிடம் தெரிவித்தனர். அவரும் இந்த சந்திப்புக்கு சம்மதித்தார்.

Aravindh kejriwal meet auto driver.jpg1Aravindh kejriwal meet auto driverஇன்று (09.04.2014) காலை ஆட்டோ டிரைவரை கெஜ்ரிவால் சந்தித்தார். கெஜ்ரிவாலை கண்டு நெகிழ்ந்துப் போன ஆட்டோ டிரைவர், கெஜ்ரிவாலின் கரங்களை பிடித்தபடி ‘நேற்று நான் நடந்து கொண்ட விதத்துக்காக மிகவும் வருந்துகிறேன். நான் செய்த தவறுக்காக என்னை மன்னித்து விடுங்கள்’ என்று கண்ணீர் விட்டார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கெஜ்ரிவால், ‘என்னை தாக்கியவர்களை நான் மன்னித்து விட்டேன். நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் காயப்படுத்துங்கள். நான் எதிர் தாக்குதல் நடத்த மாட்டேன். இதே போல், எனது தொண்டர்களும் எதிர் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். எதிர்த்து தாக்கினால், அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்’ என்று கூறினார்.

அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கப்படுவது இது முதல்முறையல்ல! போராட்ட காலங்களில் பேருந்துக்கள் தாக்கப்படுவதைப் போல போகும்இடமெல்லாம் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கப்படுகிறார். இது ஆச்சரியமாக இருக்கிறது. தனக்கு அரசியலில் எதிரிகளும், எதிர்ப்பாளர்களும் அதிகரித்து வருவதாக சொல்லி கொள்ளும் அரவிந்த் கெஜ்ரிவால் , அரசு வழங்கும் பாதுகாப்பை ஏற்று கொள்ள வேண்டும். இல்லையென்றால், பொது இடங்களில் தனக்கு மாலை மரியாதை செலுத்த வரும் நபர்களை தனது கட்சி நிர்வாகிகள் மூலம் முன்கூட்டியே அடையாளம் கண்டு அருகில் வருவதற்கு அனுமதிக்க வேண்டும். இப்படி எதுமே திட்டமிடாமல், வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிக்கொண்டு தன்னை ஒரு காந்தியவாதியாக காட்டிக்கொள்ள நினைப்பது எந்த வகையில் நியாயம்? இது அவருக்கு ஆபத்தாகதான் போய்முடியும்.

இது ஒன்றும் ஏசுநாதர் காலம் அல்ல! அரவிந்த் கெஜ்ரிவால் ஏசு கிறிஸ்தும் அல்ல! எனவே, அரசு வழங்கும் பாதுகாப்பை அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்று கொள்ள வேண்டும். இல்லையென்றால் மக்களிடம் அனுதாபத்தை பெறுவதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் இது போன்று நாடகமாடுகிறார் என்று அவருடைய அரசியல் எதிரிகளும், எதிர்ப்பாளர்களும் சொல்வது உண்மை என்று ஆகிவிடும்.

– டாக்டர்.துரைபெஞ்சமின்

படங்கள் : எஸ்.சதீஸ்சர்மா