டி.ஆர்.பாலுவுக்கு 10 கப்பல் உள்ளது: மு.க.அழகிரி ஆவேசம்!

M._K._Azhagiriமு.க.அழகிரி இன்று (02.04.2014) காலை தஞ்சையில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது தனது ஆதரவாளர்களிடம் மு.க.அழகிரி பேசியதாவது:

”எனது படம் போட்டு தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கூடியது போன்று போஸ்டர் ஒட்டியதில் என்ன தவறு இருக்கிறது. இதற்காக எனது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்குவதா? அவர்களை நீக்கியது ஏன்? என தலைவரிடம் நேரில் கேட்டேன். பொதுச் செயலாளரிடம் கேட்டு சொல்கிறேன் என்றார்.

திடீரென்று என்னையும் கட்சியை விட்டு நீக்கி விட்டார்கள். இருந்தாலும், எனக்கு தனி கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை. தி.மு.க.தான் நம்முடைய கட்சி. நாம் ஏன் வெளியே போகவேண்டும். சாகும் வரை கறுப்பு சிகப்பு கரை போட்ட வேட்டிதான் கட்டுவேன். தி.மு.க.வில் இருந்து என்னை நீக்கி உள்ளனர். ஆனால் கலைஞர் என்னை தனது மகன் இல்லை என நீக்க முடியுமா?

தஞ்சை தொகுதி தி.மு.க. வேட்பாளராக டி.ஆர்.பாலு போட்டியிடுகிறார். அவர் எவ்வளவு பணம் கொடுத்து அந்த சீட்டை வாங்கினார் என்பது எனக்கு தெரியும். கட்சிக்காக உழைத்தவர்களுக்கு சீட் கொடுக்கவில்லை. பழனிமாணிக்கத்துக்கு கொடுக்காவிட்டாலும், கட்சியில் உழைத்த வேறு யாருக்காவது சீட் கொடுத்திருக்கலாம். டி.ஆர்.பாலுவுக்கு 10 கப்பல் உள்ளது.

அவர் எம்.ஜி.ஆரா அல்லது தலைவர் கலைஞரா? எந்த தொகுதியில் நின்றாலும் வெற்றி பெறுவேன் என்பதற்கு. கடந்த முறை டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. அதனால்தான் இந்த தொகுதிக்கு வந்துள்ளார். தேர்தல் குறித்து எனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்வதற்காக இங்கு வந்துள்ளேன்.

எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். இந்த தேர்தலை விட்டால் நமக்கு வேறு வாய்ப்பு இல்லை” என்றார்.