சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு சாட்சியம் ஏதும் அளித்து விடுவார்களோ என்ற அச்சம்! பருவமடைந்து பத்து நாளான சிறுமியை கைது செய்த இலங்கை இராணுவம் !

sl newsகடந்த வருடம் அரசின் அழைப்பை ஏற்று இலங்கை வந்த ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையும், பொதுநலவாய மாநாட்டுக்கு வந்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனும், இலங்கை வடக்குக்கு சென்ற போது அங்கு நடைபெற்ற காணாமல் போனோரது குடும்ப அங்கத்தர்களின் ஆர்ப்பாட்டங்களில் சிறுமி விபூசிகாவும், அவரது தாயார் ஜெயகுமாரி பாலேந்திராவும் பிரதான பங்கு வகித்திருந்தனர்.

இதை தொடர்ந்து தன்னை மர்ம நபர்கள் தொடர்வதாகவும், தானும், தன் மகளும் அச்சறுத்தல்களுக்கு உள்ளாவதாகவும், ஜெயகுமாரி பாலேந்திரா மக்கள் கண்காணிப்பு குழுவுக்கு தகவல் அனுப்பி இருந்தார்.

அதுபோல் அவர் தனது நிர்க்கதி நிலைமை தொடர்பில் சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கும், கொழும்பில் உள்ள தூதரகங்களுக்கும் அறிவித்திருந்தார்.

தங்கள் இலங்கை விஜயங்களின் போது கதறியழுது, தங்கள் துன்பங்களை சாட்சியமாக எடுத்து சொன்ன சிறுமி விபூசிகா பாலேந்திரா மற்றும் அவரது தாயாரான ஜெயகுமாரி பாலேந்திரா ஆகியோர் தொடர்பில் ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களுக்கும், பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் அவர்களுக்கும் இருக்கின்ற சாட்சிகளை அச்சுறுத்தும் விதமாக  இந்த கைது நடவடிக்கை உள்ளது.

இலங்கை அரசு சட்ட விரோத பயங்கரவாதிகளை தேடி கைது செய்கின்றோம் என்ற போர்வையில், காணாமல் போன தம் உறவுகளை தேடி அலைபவர்களையே நீண்ட நாள் வேவு பார்த்து, அச்சுறுத்தி கைது செய்வது எந்த வகையில் நியாயம்?

அது மட்டுமல்லாமல், கைது செய்யப்பட்ட இருவரும் பெண்கள். அதிலும் ஒரு சிறுமி விபூசிகா பருவமடைந்து பத்து நாளே ஆனவர். இவர்கள் கைது செய்யப்படும் போது பெண் அதிகாரிகள் உடன் இருக்கவில்லை. இது எவ்வளவு பெரிய கொடூரமானது.

சிறுமி விபூசிகா பாலேந்திரா மற்றும் அவரது தாயாரான ஜெயகுமாரி பாலேந்திரா ஆகியோர் ஐநா மனித உரிமை பேரவை மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு சாட்சியம் ஏதும் அளித்து விடுவார்களோ என்ற அச்சம் இந்த அரசுக்கு நீண்ட நாட்களாக இருந்துள்ளது.

அதனாலேயே தன்னை மர்ம நபர்கள் தொடர்வதாகவும், தானும், தன் மகளும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாவதாகவும், தாயாரான ஜெயகுமாரி பாலேந்திரா கூறியிருந்தார்.

விபூசிகா பாலேந்திராவின் கடைசி அண்ணன் இராணுவத்திடம் சரணடைந்தவர் என்றும், அதன்பிறகு அவர் காணாமல் போயிருந்தார் என்றும், சமீபத்தில் கற்றுக்கொண்ட ஆணைக்குழு வெளியிட்ட புனர்வாழ்வு அளிக்கப்படுவோர் புகைப்படத்தில் அவர் உயிருடன் இருக்க காணப்படுகிறார் எனவும், அவரை தங்களுக்கு காட்டுங்கள் எனவுமே விபூசிக்கா பாலேந்திரா, அவரது தாயாரான ஜெயகுமாரி பாலேந்திராவுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றார்.

நடைபெற்ற குற்றச்செயல்கள் தொடர்பாக சாட்சியம் கூறி, சர்வதேச சமூகத்துக்கு தங்கள் துயர்களை எடுத்துச் சொல்லும் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பது சர்வதேச நியதி.

இலங்கை வந்த ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையும், பொதுநலவாய மாநாட்டுக்கு வந்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனும் இதையே சொல்லி சென்றுள்ளார்கள். இந்நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.