தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் எச்சரிக்கை : இலங்கை யாழ்ப்பாணம் சிறையிலிருந்து 116 தமிழக மீனவர்கள் விடுதலை!

 cm

தமிழக, இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். அப்படி விடுதலை செய்யப்படாவிட்டால் தமிழகப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளமாட்டார்கள் என்று தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா பல முறை எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதன்படி இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை, யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த 116 தமிழக மீனவர்கள் 12.03.2014 அன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இருந்த போதிலும், இன்று (13.03.2014) நடக்கவிருந்த தமிழக, இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுக்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்த வருடத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் மொத்தமாக 148 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் 116 பேரை சட்டமா அதிபரின்  உத்தரவின் பேரில், நீரியல் கடற்தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் கடித அறிவித்தலை அடுத்து ஊர்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.   

விடுதலை செய்யப்பட்டவர்களின் 26 படகுகளும் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. விடுதலை செய்யப்பட்டவர்கள் போக, இன்னும் 32 தமிழக மீனவர்கள் யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருக்கின்றார்கள். இவர்களும் எந்தவேளையிலும் சட்டமா அதிபரின் உத்தரவின் பேரில் விடுதலை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்களுடைய பாதுகாப்பில் யாழ்ப்பாணத்தில் வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.இவர்கள் இலங்கைக் கடற்படையினரிடம் கையளிக்கப்பட்டு, இந்திய கடலோரக் காவல் படையினரிடம் ஒப்படைக்கப் படுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இலங்கை, தமிழக மீனவ பிரதிநிதிகளுக்கிடையில் இன்று (13.03.2014) கொழும்பில் நடைபெறவிருந்த இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற மாட்டாது என்று இலங்கைக் கடற்தொழில் அமைச்சின் ஊடகச் செயலாளர் நரேந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளர். இந்தியத் தரப்பினர் இன்றைய பேச்சுக்களில் கலந்து கொள்ள முடியாதிருப்பதாகத் தெரிவித்து, வேறு ஒரு தேதியைக் கோரியிருப்பதாகவும் அவர் கூறினார்.